இதய பரிசோதனைக்காக வந்தவருக்கு கை அகற்றம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
1 min read
Edappadi Palaniswami condemns removal of hand of person who came for a heart examination
27.9.2023
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்தவருக்கு கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கை அகற்றம்
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்த பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காததன் காரணமாக கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்த ஜோதி என்ற பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காததன் காரணமாக கை அகற்றப்பட்டதாக செய்திகள் வருகின்றன. கடந்த ஆண்டு தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த திமுக அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவமும் ஏற்படுத்திய காயமே இன்னும் ஆறும் முன்னர் மீண்டும் இது போன்ற ஒரு துயர சம்பவம் நடந்திருப்பது, அலட்சியமும் அக்கறையின்மைக்கும் உதாரணமாக இருக்கும் இந்த திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியுற்றது என்பதற்கான பெரும் எடுத்துக்காட்டு. மக்களை காக்கும் கடமையில் இருந்து இந்த அரசு ஒவ்வொரு நாளும் தவறிச் செல்வதை வன்மையாக கண்டிப்பதுடன், அரசின் தவறான சிகிச்சையால் தனது கையை இழந்து தவிக்கும் ஜோதிக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்கவும், அவருக்கு தக்க இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.