June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

1 min read

Part-time teachers call off strike

5.10.2023
சென்னையில் பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

போராட்டம்

சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 7 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அதேபோல், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு முழு நேர ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கோரியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித்தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரியும் போராட்டம் நடத்தினர்.

போராடி வரும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஆசிரியர்களை பேருந்தில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் திருமண மண்டபம் மற்றும் சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு சமுதாய நலக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அந்த சங்கத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *