திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம்
1 min read
Surasamharam Kolagalam in Tiruchendur
18.11.2023
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடந்தது. சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
சூரசம்ஹாரம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர்.
விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பல்வேறு அபிஷேகத்துக்கு பின், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று சில பக்தர்கள் சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், ஔவையார், நாரதர் உள்ளிட்ட சுவாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் 80 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நகரை சுற்றி 20 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மேல், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருளினார்.
அங்கு, முதலாவதாக யானை முகம் கொண்ட தாரகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார். தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட வேலில், இரண்டாவதாக சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் செய்தார்.
தொடர்ந்து, தலையை ஆட்டியபடி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். பின்னர் தன்முகத்தோடு எழுந்தருளிய சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.
மாமரமாகவும், சேவலாகவும் மாறி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். சூரனை சம்ஹாரம் செய்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஜெயந்திநாதர் ஆட்கொண்டார்.
சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்தி நாதருக்கும் அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. அதற்காக, ஜெயந்திலநாதர் கடற்கரையில் அமைந்துள்ள மண்டபத்திற்கு செல்கிறார். தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது.
7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.