எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 8.68 கோடி நிவாரணம்
1 min read
Oil Spill Affected Families Rs. 8.68 crore relief
23.12.2023
மிக்ஜம் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொசஸ்தலை ஆற்றில், எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த 05.12.2023 அன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றிட தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படை குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம். நெட்டுக்குப்பம். வ.உ.சி.நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது.
மேலும், இக்கிராமங்களை சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவினால் மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இயலாததால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அத்தொகையும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, கூடுதலாக எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவ கிராமங்களை சார்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500 வீதமும், மேலும் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் 3 கோடி ரூபாய் அரசினால் ஒப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம், மொத்தம் 5 கோடியே 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, மிக்ஜம் புயல் கனமழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு 8 கோடியே 68 லட்சம் ரூபாய் வழங்கிட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.