June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

டாக்டரின் பரிந்துரை இல்லாமல் இனி இருமல் மருந்து வாங்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு

1 min read

Cough syrup can no longer be purchased without a doctor’s prescription – Central Government announcement.

16.6.2026
1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்தின்படி, இருமல் மருந்துகள் உள்ளிட்ட சிரப்களின் விற்பனையைக் கட்டுப்படுத்தும் விதிகளை மத்திய அரசு கடுமையாக்கி உள்ளது. இந்த திருத்தத்தின்படி, நுகர்வோர் மருந்தகங்களிலிருந்து அத்தகைய மருந்துகளை வாங்குவதற்கு முன்பு டாக்டரின் பரிந்துரை சீட்டை (Prescription) பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் ஏற்பட்டநிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட வரைவு முன்மொழிவு மீதான பொதுமக்களின் கருத்துக்களை பரிசீலித்த பின்னர், கடந்த 9-ந் தேதி தேதியிட்ட அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மத்திய அரசு மருந்துகள் (5-வது திருத்த) விதிகள், 2026 மூலமாக இந்த வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

இதன்படி, வீட்டு உபயோக சாதாரண மருத்துவ பொருட்களின் வரிசையில் இடம் பெற்றிருந்த ‘சிரப்ஸ்’ என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இதுவரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி விற்கப்பட்டு வந்த திரவ மருந்துகள் அனைத்தும், தற்போது கடுமையான மருந்து ஒழுங்குமுறை பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (DTAB) உடன் கலந்தாலோசித்து, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940-இன் பிரிவுகள் 12 மற்றும் 33-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்த இறுதி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த ஒழுங்குமுறை மாற்றத்தின்படி, பொதுவாக பயன்படுத்தப்படும் இருமல் மருந்துகள் உட்பட, சில மருந்துகள் இனி மருத்துவ அங்கீகாரம் இல்லாமல், மருந்து சீட்டு (Prescription) இல்லாமல் நுகர்வோர் வாங்க முடியாது.

அத்தகைய மருந்துகளை வாங்க விரும்பும் நுகர்வோர், இனி ஒரு பதிவுசெய்யப்பட்ட டாக்டரால் வழங்கப்பட்ட மருந்துச் சீட்டை சமர்ப்பிக்க வேண்டும்.

முன்பு மருந்தகங்களில் நேரடியாகக் கிடைத்து வந்த இருமல் மற்றும் பிற மருந்துகளின் வழக்கமான கொள்முதல்களை இந்த நடவடிக்கை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளர் ஹர்ஷ் மங்களா வெளியிட்டுள்ளார். தற்போது இந்த திருத்தம் அமலுக்கு வந்துள்ளதால், நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள், இருமல் மருந்துகள் மற்றும் அது தொடர்பான தயாரிப்புகளின் விற்பனையை கட்டுப்படுத்தும் திருத்தப்பட்ட விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *