June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

நாகூர் தர்காவில் கவர்னர் ஆர்.என்.ரவி பிராத்தனை

1 min read

Governor RN Ravi prayer at Nagore dargah

24.12.2023-
நாகூர் ஆண்டவர் தர்கா மராமத்து பணிக்காக, மத்திய அரசு ரூ.68 கோடி நிதி வழங்க வேண்டும் என கவர்னரிடம் தர்கா நிர்வாகிகள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள நாகூர் ஆண்டவர் தர்காவின், 467-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து நாகூர் ஆண்டவரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு ஊர்வலம் இன்று (23-ம் தேதி) மாலை நாகையில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாளை (24ம் தேதி) அதிகாலை நாகூர் அலங்கார வாசலை வந்தடைகிறது. பின்னர் சந்தன குடங்கள் இறங்கப்பட்டு, நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
இவ்வாறு புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10.35 மணிக்கு நாகூர் வந்தார். இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு இன்று (23-ம் தேதி) காலை திருச்சி விமானநிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருவாரூர் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அங்கு காலை உணவை முடித்துவிட்டு, அங்கிருந்து காரில் புறப்பட்டு நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தார். ஆளுநர் காரில் இருந்து இறங்கியவுடன், நாகூர் தலைமை அறங்காவலர் செய்யது அபுல் பதஹ் சாஹி மற்றும் நிர்வாகிகள், பாரம்பரிய முறைப்படி நகரா வாசித்தும், மேளதாளம் முழங்கியும் வரவேற்றனர்.
இதை தொடர்ந்து நாகூர் தர்கா அலங்கார வாசலில் ஆளுநருக்கு, நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதை தொடர்ந்து அங்கிருந்த பா.ஜ.க தேசிய கவுன்சில் உறுப்பினர் தங்க.வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி ஆகியோர் பொன்னாடை போற்றி வரவேற்றனர். இதையடுத்து ஆளுநர் தர்கா உள்ளே சென்றார்.
அப்போது அங்கு இருந்த தர்கா நிர்வாகத்தினர் அனைவரும் கைகூப்பி வரவேற்றனர். ஆளுநரும் தர்கா நிர்வாகத்தினரை பார்த்து கைகூப்பி வணங்கினார். பின்னர் பெரிய ஆண்டவர் சமாதியில் சிறப்பு துவா செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஆளுநர் பெரிய ஆண்டவர் சமாதி முன்பு சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். இதையடுத்து ஆளுநருக்கு பெரிய ஆண்டவர் சமாதியில் இருந்து எடுத்து வரப்பட்ட பூ கொடுக்கப்பட்டது. இதை ஆளுநர் பெற்று தனது உதவியாளரிடம் கொடுத்தார்.
தொடர்ந்து வெளியே வந்த ஆளுநர் அங்கு வைத்திருந்த நாகூர் தர்கா முக்கியஸ்தர்கள் வருகை பதிவேட்டில் ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டார். அதில், 467-வது ஆண்டு நாகூர் தர்கா கந்தூரி விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களை பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாச்சாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழமை வாய்ந்த இந்த நாகூர் தர்கா பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு இருந்தார். பின்னர் 10.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார். தரிசனம் முடிந்து வெளியே வந்த ஆளுநரிடம், நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் காஜி உசேன் சாஹிப், ஆலோசனை குழு தலைவர் செய்யது முகம்மது கலிபா சாஹிப் ஆகியோர் நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் மனு கொடுத்தனர். அதில், நாகூர் தர்கா 450 ஆண்டுகள் கடந்த புகழ் பெற்றது ஆகும். இவ்வாறு புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் உருவம் பொறித்த நாணயத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும். நாகூர் தர்கா மராமத்து பணிக்காக, அரசு ரூ.4 கோடி விடுவித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.3 கோடி விரைவில் வழங்கப்படும். மத்திய அரசு நாகூர் தர்கா மராமத்து பணிக்காக ரூ.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தனர். மனுவை ஆளுநர் பெற்று கொண்டார். ஆளுநர் வருகையை முன்னிட்டு தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், நாகை எஸ்பி ஹர்ஷ்சிங், அரியலூர் எஸ்பி பெரோஸ்கான்அப்துல்லா ஆகியோர் தலைமையில் 4மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *