தமிழகத்தில் 6-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
1 min readChance of moderate rain in Tamil Nadu till 6th
31/12/2023
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும்.
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
நாளை முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
இன்று முதல் 4-ந்தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம். என அறிவுறுத்தப்படுகிறார்கள்.