May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

ராமேசுவரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம்

1 min read

Prasadam throughout the day in 5 temples including Rameswaram and Tiruparangunram

31/12/2023
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சென்னை, திருவல்லிக்கேணி பார்த்த சாரதி சுவாமி கோவிலில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், அழகர்கோவில் கள்ளழகர் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் 5 கோவில்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 15,000 பக்தர்களும், விசேஷ மற்றும் திருவிழா நாட்களில் சுமார் 50,000 பக்தர்களும் பிரசாதங்களை பெற்று பயனடைவார்கள். பிரசாதங்கள் தரமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்திட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளதோடு, அவற்றை பக்தர்களுக்கு வழங்கிட அந்தந்த கோவில்களில் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே 2 கோவில்களில் இருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு திருவண்ணாமலை திருச்செந்தூர் உட்பட மேலும் 6 கோவில்களில் இந்த முழு நேர அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி 8 கோவிலில் அந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கின்றது.
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், மேல் மலையனூர் அங்காளம்மன் கோவில், ஆனைமலை மாசாணி அம்மன் ஆனைமலை கோவில் ஆகிய 3 கோவில்கள் இணைக்கப்பட உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் இந்த மூன்று கோவிலிலும் முழு நேர அன்னதான திட்டத்தை துவக்கிட உள்ளார்.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் சன்னிதானத்தில் தைப்பூசத்தன்று இருபதாயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கிட திட்டமிடப்பட்டு இந்த ஆண்டு அதை துவக்க வைக்க இருக்கின்றோம்.

இதோடு மட்டுமல்லாமல், ஒருவேளை அன்னதான திட்டத்தில் ஏற்கனவே இருந்த 754 கோவிலோடு இணைத்து இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 10 கோவில்கள் கூடுதலாக இணைக்கப்பட்டன. இந்த ஆண்டு 7 கோவில்கள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன.
கோவில்களின் பிரசாதம் மற்றும் அன்னதான உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிப்பதை உறுதிப்படுத்தி ஒன்றிய அரசினால் வழங்கப்படுகின்ற தரச்சான்றிதழ்களை 523 கோவில்களுக்கு இதுவரையில் பெற்று இருக்கின்றோம். இந்தியாவிலேயே அதிகமான கோவில்களுக்கு உணவு தர கட்டுப்பாட்டுக்காக வழங்கப்பட்ட சான்று தமிழகத்தில் தான் அதிகம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசிக்கு 73 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்த போதும் சிறு அசம்பாவிதம் இல்லாமல் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்கின்ற நல்ல சூழலை உருவாக்கி தந்தோம். அதுபோல் ஆங்கில புத்தாண்டிற்கு கடந்த ஆண்டுகளில் எந்தெந்த கோவில் எல்லாம் இரவு 12 மணிக்கு திறக்கப்பட்டிருந்ததோ, ஒரு சில கோவில் காலையில் திறக்கப்பட்டதோ அந்த நடைமுறையை பின்பற்ற சொல்லியும் எந்த கோவிலிலும் அர்ச்சகர்களுக்கு அழுத்தம் தராமல் பக்தர்களுக்கு இலகுவான தரிசனத்தை ஏற்படுத்தித் தர உத்தரவிடப்பட்டிருந்தது.

48 முதுநிலை கோவில்களுக்கும் சிசிடிவி பொருத்தப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றோம். அதிகமான பக்தர்கள் வருகின்ற கோவில்களை ஆணையாளர் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றார்.

ஆகவே கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆங்கில புத்தாண்டிற்கு சிறப்பாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றோம். மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தவரை சுமார் 30-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அவை முறையாக ஆய்வு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீதிமன்றத்தில் என்னென்ன விதி மீறல்கள் இருக்கிறது என்பதை சமர்ப்பிக்க இருக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.