தென்காசி அருகே கார்-லாரி மோதி 6 பேர் பலி
1 min read6 killed in car-lorry collision near Tenkasi
28.1.2024
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் புளியங்குடியை சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர்கள் கார்த்திக், வேல் மனோஜ், சுப்பிரமணி, மனோகரன், போத்திராஜ்,மற்றும் ஒருவர் என ஆறு பேர் நேற்று இரவு ஷிப்ட் டிசைர் காரில் குற்றாலத்திற்கு குளிக்க புறப்பட்டுள்ளனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் புளியங்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த பொழுது புளியங்குடி அருகில் உள்ள சிங்கிலிப்பட்டிற்கும் புன்னையாபுரத்திற்கு இடையை ஓட்டுனர் கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக கேரள மாநிலத்திற்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது கார் மோதியதில் கார் மீது லாரி ஏரி இறங்கியதாக கூறப்படுகிறது .
இதில் காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட ஆறு நபர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.ஒருவர் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலையில் அவரும் பரிதாபமாக பலியானார்.
அதிகாலை நடந்த இந்த கோரச் சம்பவம் குறித்து காவல்துறையினரும்,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரும் ,ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்தவர்கள் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரை மணி நேரமாக கடுமையாக போராடி காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அங்கே முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
மேலும் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு தற்போது போக்குவரத்து பாதிப்பு சீரமைக்கப்பட்டுள்ளது. அதிகாலை நடந்த இந்த கோரச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒரே பகுதியைச் சேர்ந்த 6 நபர்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தையும் புளியங்குடி பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.
புளியங்குடியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் கலந்து கொண்ட ஒரே சமுதாயத்தைச் சார்ந்த ஐந்து நபர்களும் மற்றொரு சமுதாயத்தைச் சார்ந்த ஒரு நபரும் என ஆறு நபர்கள் காரில் குற்றாலம் சென்று விட்டு திரும்பும் வழியில் கோரவிபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா மறுமலர்ச்சி திமுக துணை பொது செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் திமு இராசேந்திரன் மற்றும் பலர் நேரில் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.