May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சொத்து விவரம்

1 min read

Nellai BJP candidate Nayanar Nagendran property details

26.3.2024
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கா.ப.கார்த்திகேயனிடம் தனது வேட்புமனுவை நயினார் நாகேந்திரன் அளித்தார். அவருடன் திருநெல்வேலி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சொத்து மதிப்பு: நயினார் நாகேந்திரன் மீதுள்ள அசையும் சொத்து மதிப்பு ரூ.12 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.1.91 கோடி, மொத்த கடன் ரூ.2.61 கோடி. இவரது மனைவி சந்திரா மீதுள்ள அசையும் சொத்து மதிப்பு ரூ.12.03 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.5.98 கோடி. மொத்த கடன் ரூ.2.52 கோடி.

மனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஏற்கெனவே மத்திய அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துவதற்காக இருபுறமும் சாலை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்படும். திமுக அரசின் மகளிர் உரிமை தொகை அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்கப்படவில்லை.

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலையில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் என்னால் கொண்டுவரப்பட்டன. நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா திட்டத்துக்காக 3 முறை ஒப்பந்தத்தை புதுப்பித்து உள்ளேன்.

எனக்கு அறிமுகம் வழங்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. நான் பாஜகவுக்கு சென்றாலும் அவரை ஒருபோதும் மறக்க மாட்டேன். தேர்தல் சுவரொட்டிகளில் அவரது படத்தையும், எம்.ஜி.ஆர், பிரதமர் மோடி, அண்ணாமலை படங்களையும் அச்சிடவுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.