April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

முக்தார் அன்சாரியை ஜெயிலில் விஷம் வைத்து கொன்று விட்டதாக உறவினர்கள் கதறல்

1 min read

Relatives of Mukhtar Ansari are shouting that they poisoned him in jail

29.3.2024
உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல தாதாவாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் முக்தார் அன்சாரி. இவர் மீது அந்த மாநிலத்தில் 63 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 15 வழக்குகள் கொலை வழக்குகள் ஆகும்.

உத்தர பிரதேச வரலாற்றில் மிகப்பெரிய தாதாவாக கருதப்பட்ட இவர் 1963-ம் ஆண்டு செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். இவரது மூதாதையர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். ஆனால் தவறான நபர்களுடன் சேர்ந்ததால் முக்தார் அன்சாரி தாதாவாக மாறினார்.

1980-ல் இவர் ஒரு தாதா கும்பலில் சேர்ந்து தனிப்பெரும் ரவுடியாக உலா வந்தார். மிக குறுகிய காலத்தில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல்களில் இவர் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கினார். 1990-ல் இவருக்கு என்று தனி ரவுடி படை உருவாகியது.

உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் இவரது பெயரை கேட்டாலே பயப்படும் அளவுக்கு அவர் அந்த மாநிலத்தில் குற்ற நடவடிக்கைகளில் கலக்கி வந்தார். காசிப்பூர், வாரணாசி, ஜான்பூர், மவு ஆகிய மாவட்டங்களில் இவரது அட்டகாசம் மிக கடுமையாக இருந்தது.

இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் 8 வழக்குகளில் இவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக இவர் அடிக்கடி ஜெயிலுக்கு செல்ல நேரிட்டது. அரசியல்வாதிகளின் தொடர்பு ஏற்பட்டதால் பல வழக்குகளில் தப்பி வந்தார்.

குற்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அவர் அரசியலில் ஈடுபட தொடங்கினார். மவு தொகுதியில் அவருக்கு செல்வாக்கு இருந்ததால் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் இருந்து அவர் 5 தடவை உத்தர பிரதேச சட்டசபைக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதால் பஞ்சாபிலும், உத்தர பிரதேசத்திலும் ஜெயிலுக்குள் இருக்க வேண்டி இருந்தது. ஜெயிலுக்குள் இருந்தபடியே அவர் தனது கூலிப்படையை இயக்கிக் கொண்டே அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் ஒரு தண்டனைக்காக அவர் பண்டா ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஒரு மாதமாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து பண்டாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் அவர் உடல்நிலை மோசமானது. அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கண்காணித்து வந்தனர்.

நேற்று இரவு 8.45 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார். இதுபற்றி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது கூலிப்படை ரவுடிகளும் பீதிக்குள்ளானார்கள். முக்தார் அன்சாரி மரணத்தை தொடர்ந்து அவரது வீடு மற்றும் சில நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே முக்தார் அன்சாரியின் மனைவி மற்றும் மகன்கள் முக்தார் அன்சாரி சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். முக்தார் அன்சாரிக்கு ஜெயிலில் விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் இதை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.