தென்காசியில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்
1 min readAll party representatives consultative meeting in Tenkasi
31.3.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி தனி நாடாளுமன்ற தொகுதிக்கு 19.04.2024 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காவல் துறை பார்வையாளர் பங்கஜ் நைன் பாராளுமன்ற தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இன்றி நடக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அனைத்து வேட்பாளர்களும் தொகுதி வாரியான செலவின கணக்குகளை பராமரித்து வரவேண்டும் எனவும், உரிய காலத்தில் செலவின கணக்குளை உரிய அலுவலர்களிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினர்.
கூட்டத்தில் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா தெரிவித்ததாவது,
தேர்தல் நடத்தை தொடர்பான புகார் மற்றும் கருத்துக்களை தென்காசி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-8375 வாயிலாகவும், வாக்காளர் உதவி மைய எண் 1950 என்ற எண்ணிலும் தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும் எவரேனும் நேரடியாகத் தேர்தல் பார்வையாளரிடம் புகார் தெரிவிக்க விரும்பினால் குற்றாலம், அரசு விருந்தினர் மாளிகையில் அறை எண்.102 –ல் தினமும் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்றும் கைபேசி எண்.9363752362 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
கூட்டத்தில் தேர்தல் செலவின கணக்குகள் தொடர்பாக அனைத்து கட்சியினரும் மற்றும் வேட்பாளர்களும் எழுப்பின சந்தேகங்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் உரிய பதிலளித்தனர்.
இக்கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் சதீஷ் குருமூர்த்தி, சித்திக் முகமது அமீர், முகமது இக்பால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.