முதல் – அமைச்சர் மு .க .ஸ்டாலின் காய்கறி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்
1 min readFirst- Minister M. K. Stalin collected votes from vegetable traders
31.3.2024
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. நேற்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
முதல் – அமைச்சர் மு. க . ஸ்டாலின் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களில் கலந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு சேலத்தில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்ட முதல் – அமைச்சர் மு .க . ஸ்டாலின் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து கார் மூலமாக ஈரோடு வந்த முதல் – அமைச்சர் மு. க. ஸ்டாலின் ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சக்திசுகர் பயணியர் மாளிகையில் இரவில் தங்கினார்.
இந்நிலையில் நேற்று காலை 7 அளவில் பயணியர் மாளிகையில் இருந்து வெளியே வந்த முதல்-அமைச்சர் மு .க . ஸ்டாலின் ஈரோடு சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தைக்கு நேரடியாக சென்றார். அங்கு காய்கறி வியாபாரிகளிடம் ஈரோடு பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே. இ. பிரகாசுக்கு வாக்கு சேகரித்தார்.
முதல்-அமைச்சரை பார்த்ததும் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் அவர் அருகே வந்து நின்றனர். பெண்கள் குழந்தைகள் உற்சாக மிகுதியில் முதல்-அமைச்சருடன் போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர். காய்கறி வியாபாரிகளிடம் வியாபாரம் எப்படி போகிறது என்று முதல் – அமைச்சர் கேட்டறிந்தார்.
அப்போது பெண் வியாபாரிகள் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தமைக்காக முதல் – அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். குறிப்பாக மகளிருக்காக இலவச பேருந்து பயணம் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டம் என்றும் இதனால் தங்களுக்கு மாதம் ரூ.880 வரை மிச்சமாகிறது என்று பெண் வியாபாரிகள் முதல்-அமைச்சரிடம் கூறி நன்றி தெரிவித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வீதியாக சென்று முதல்- அமைச்சர்வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்கள் எங்கள் ஓட்டு தி.மு.க.வுக்கு தான் என்று கூறினர். அதனை கேட்டு புன்னகைத்த முதல் – அமைச்சர் அவர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். தி.மு.க வேட்பாளர் கே. இ. பிரகாஷ்,
அமைச்சர் முத்துசாமி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி. உட்பட பல்வேறு நிர்வாகிகள் உடன் இருந்தனர். சுமார் 40 நிமிடம் முதல் – அமைச்சர் மு. க. ஸ்டாலின் அங்கு வாக்கு சேகரித்தார். முதல் – அமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரசாரத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு .க . ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். அங்கு ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கே .இ. பிரகாஷ், கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி, நாமக்கலில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த மாதேஸ்வரன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.
முதல்- அமைச்சர் வருகை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈரோடு மாநகர் பகுதி முழுவதும் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் சின்னியம்பாளையம் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் – அமைச்சர் வருகை ஒட்டி ஈரோட்டில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.