October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

இலங்கைக்கு கட்சத்தீவை தாரைவார்த்தது எப்படி?- பிரதமர் மோடி இணைய பதிவு

1 min read

Prime Minister Modi’s online post about the Congress’s opening to Sri Lanka

31.3.2024
காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு கச்சத்தீவை அக்கட்சி இரக்கமின்றி தாரைவார்த்தது அம்பலமாகியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்த பத்திரிக்கை செய்தியைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், காங்கிரஸின் இந்த செயல் அதிர்ச்சியளிப்பதாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் 75 ஆண்டுகால செயல்திறன் என்று பதிவிட்டுள்ள பிரதமர் மோடி இதன்மூலம், காங்கிரஸை எப்போதும் நம்பக்கூடாதென்பது, மக்கள் மனதில் உறுதியாக பதிவாகியிருப்பதாகவும், இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள கச்சத் தீவை, ”எங்களுக்குத் தான் சொந்தம்” என்று இலங்கை அரசு 1920 ஆம் ஆண்டில் கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.

இந்நிலையில், 1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார்.

இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது. 28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர்.

இலங்கைக்குச் சென்ற அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, பண்டாரநாயகாவிடம் பாகிஸ்தான், இலங்கையில் விமானதளம் அமைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று வேண்டுகோள் வைத்தார். அதற்கு, கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தருமானால், பாகிஸ்தானை விமானதளம் அமைக்க அனுமதிக்க மாட்டேன் என்று பண்டாரநாயகா கூறினார்.அதனால்தான், கச்சத்தீவு இலங்கைக்குத் தரப்பட்டதாக பிரதமர் இந்திரா காந்தி குறிப்பிட்டார். கச்சத்தீவு தமிழகத்திற்குச் சொந்தமாக இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காகவே அது இலங்கைக்குத் தரப்பட்டதாகக் கூறினார். கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது மிகப்பெரிய தவறு என்று தமிழக அரசியல் தலைவர்கள் அனைவருமே கவலையோடு அன்றைக்குப் பேசியது உண்மை.

இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சத்தீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கை எல்லைக்கு போனது. ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்கி திரும்பவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.