ஜாலியன்வாலா பாக் படுகொலை தினம்; பிரதமர், ஜனாதிபதி அஞ்சலி
1 min readJallianwala Bagh Massacre Day; Prime Minister, President Anjali
13.4.2024
ஜாலியன்வாலா பாக் சம்பவத்தின்போது ஈடுஇணையற்ற தைரியம் மற்றும் தியாகம் ஆகியவற்றை மக்கள் வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டு உள்ளார்.
பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலா பாகில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ல் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பிரிட்டிஷ் படையினரால் முன்னறிவிப்பு எதுவுமின்றி சுட்டு கொல்லப்பட்டனர்.
பொதுமக்களுடைய சுதந்திர நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வகைசெய்கிற, காலனி நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிக்க கூடிய, ரவுலட் சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராடி வந்தபோது, இந்த கொடூர படுகொலை சம்பவம் நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஆண், பெண் பேதமின்றி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ஜாலியன்வாலா பாக் படுகொலை நாளை நினைவுகூரும் வகையில், பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் ஊடக பதிவில், நாடு முழுவதுமுள்ள என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் சார்பில், வீரமரணம் அடைந்த அனைவருக்கும் மனதின் ஆழத்தில் இருந்து என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார். வீடியோ ஒன்றையும் அதனுடன் சேர்த்து பகிர்ந்திருக்கிறார்.
இதேபோன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் ஊடக பதிவில், ஜாலியன்வாலா பாகில் தாய்நிலத்திற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்.
சுயராஜ்ஜியத்திற்காக உயிர்த்தியாகம் செய்த அனைத்து பேராத்மாக்களுக்கும் நாட்டு மக்கள் எப்போதும் கடன்பட்டுள்ளனர். வீரமரணம் அடைந்தவர்களின் நாட்டுப்பற்றுக்கான மனவுறுதியானது, வருங்கால தலைமுறையை எப்போதும் ஊக்கப்படுத்தும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.