April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது

1 min read

The election campaign in Tamil Nadu is over

17.4.2024
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19-ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

அ.தி.மு.க. தலைமையிலான அணியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா, அ.ம.மு.க., முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன.

நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது.

4 முனை போட்டி நிலவும் தமிழகத்தில் பிரதமர் மோடி 9 முறை தமிழகம் வந்து பா.ஜனதா அணிக்காக பிரசாரம் செய்துள்ளார். அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள் தமிழகத்தில் முற்றுகையிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2 முறை தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடந்த 4 வாரங்களாக நடைபெற்ற அனல் பறந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதால் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் நேற்றும், இன்றும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வடசென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொளத்தூர், ஐ.சி.எப். உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றவாறு வீதி, வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். மாலையில் காஞ்சீபுரம் படப்பை பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இன்று அவர் திமுக ஆட்சியின் திட்டங்களை பட்டியலிட்டு, வேட்பாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஏப்ரல் 19-ம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிற நாள், நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் வாக்கு கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை நாசமாக்கிய பாசிச பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாட்டை காக்க, நாளைய தலைமுறையை காக்க இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருக்கும், உங்கள் திராவிட அரசின் சாதனைகள் இந்தியா முழுக்க எதிரொலிக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இன்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி பிரசாரத்தை நிறைவு செய்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் வாகன பேரணி நடத்தி ஆதரவு திரட்டினார். தொடர்ந்து அங்கேயே பிரசாரத்தை முடித்தார். மேலும் அவர் வீடியோ வெளியிட்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் வாக்கு சேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை புரசைவாக்கத்தில் இறுதிகட்ட பிரசாரம் செய்தார்.

தர்மபுரியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தை முடித்தார்.
விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இன்றுறு பிரசாரம் முடித்தார்.

தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

புதுச்சேரியிலும் இன்று மாலை பிரசாரம் நிறைவடைந்தது. எனவே அங்கும் முதல்-மந்திரி ரங்கசாமி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் மொத்தம் 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்த தொகுதிகளில் இன்று மாலை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இந்த 102 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.