May 1, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை மாணவிகள் கண்டெடுத்த மருதநாயகம் கல்வெட்டு

1 min read

Marudanayakam inscription found by Nellie students

18.4.2024
தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 15,16-04-2024 ஆகிய இரு நாள்கள் முனைவர்ப் பட்ட மற்றும் முதுகலை மாணவர்களுக்கான கருத்தரங்கம் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் சார்பில் நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் இந்த கருத்தரங்கை தொடங்கிவைத்து உரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழக முதுகலைத் தொல்லியல் மாணவர்களும், 24 மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் மாணவர்களும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். இவர்கள் தங்கள் புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகளை கட்டுரையாக வாசித்தனர். இவர்களுடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் முனைவர் மதிவாணன் கலந்து கொண்டார்.

இந்தக் கருத்தரங்கை தமிழ்ப் பல்கலைக்கழக் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை தலைவர் முனைவர் வீ.செல்வகுமார் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். கட்டுரை வாசித்த மாணவர்களை மாணவியர்க்கு ஆலோசனை கூறினார்.
சில வாரங்களுக்கு முன்னர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவி ஆஸ்லின் காருண்யா மற்றும் சுபாஷிணி திருநெல்வேலி மாவட்டம், தருவையில் உள்ள தடுப்பணையில் ஒரு கல்வெட்டை கண்டறிந்தனர். இந்த மாணவிகள் தான் கண்டறிந்ததை ஆராய்ச்சி கட்டுரையாக இந்த கருத்தரங்கில் வாசித்தனர். இந்த கல்வெட்டு 1760 ஆம் ஆண்டில் ”அசாது மம்மது இசபு கான் பாதா சாயபு” என்பவர் இந்த தடுப்பணையைக் கட்டியதாக விளக்குகிறது. அசாது மம்மது இசபு கான் பாதா சாயபு என்பவர் மருதநாயகம் எனப்படும் யூசுப் கான் அவர்களைக் குறிக்கலாம் எனத் தொல்லியல் அறிஞர்கள் கூறினார்கள்.
யூசுப் கான் 1759 முதல் 1764 வரை மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்டப் பகுதியை ஆட்சி செய்தார். இவரது ஆட்சியில் மதுரையின் பல்வேறு பகுதிகள் தழைத்தோங்கியது என்று தொல்லியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். விவசாயத்திற்காக நீர்நிலைகளை சீரமைப்பது வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து மதுரை நகரை பலப்படுத்தினார்.
இதுபோல தருவை தடுப்பனையைக் கட்டி திருநேல்வேலி பகுதியில் விவசாயம் செழிக்க பெருமளவில் உதவியுள்ளார் எனத் தெரிகிறது. யூசுப்கான் 1764 ஆம் ஆண்டு அக்டோபர் 15 நாள் மதுரை அருகே உள்ள சம்மட்டிபுரத்தில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டத் தொல்லியல் மாணவிகள் ஆஸ்லின் காருண்யா மற்றும் சுபாஷிணியை தொல்லியல் பேராசிரியர்களும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை தலைவர் (பொறுப்பு) சி. சுதாகர் மற்றும் துணைவேந்தர் சந்திரசேகர் அவர்களும் பாராட்டினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.