September 14, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் கொடுத்த துப்பட்டா/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Dupatta that gave Kannayira/ comedy story / Tabasukumar

17.5.2024
கண்ணாயிரம் பழைய நினைவுகளை மறந்த நிலையில் தனது மாமனார் அருவாஅமாவாசையை அருவாவியாபாரி என்று சொன்னார். ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு கண்ணாயிரம் ஆட்டோவில் வந்தபோது அருவாஅமாவாசை அருவாளுடன் துரத்த அவர் கண்ணாயிரத்தை கொல்ல விரட்டுவதாக நினைத்த போலீசார் பாய்ந்துவந்து அருவாஅமாவாசையை அலாக்கா தூக்கி போலீஸ்நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடத்திய விசாரணையில் அருவாஅமாவாசை தன் மகள் பூங்கொடி முழுகாம இருக்கா .இந்த சூழ்நிலையில் கண்ணாயிரம் பழைய நினைவுகள் மறந்து பேசுறானே என்று அழுது புலம்ப பூங்கொடியோ தன் கணவருக்கு ஆதரவாக பேச இன்ஸ்பெக்டர் கோபத்தில் அருவாஅமாவாசையை இந்தப் பக்கமே வரக்கூடாது என்று விரட்டிவிட்டார்.
பின்னர் பூங்கொடியிடம், நீங்க வேற முழுகாம இருக்கீங்க என்று வார்த்தையை இழுக்க பூங்கொடியோ கண்ணாயிரத்தை சொல்வதாக நினைத்து ஆமா, அவரை இன்னும் தலைமுழுகாம இருக்கேன் என்று சொல்ல, இன்ஸ்பெக்டர் நிலைதடுமாறி ,அதாவது கண்ணாயிரத்தை சொல்லலை.. உங்களைத்தான் சொன்னேன் என்க.. பூங்கொடியோ.. ஆமா சார், அவரை ஆஸ்பத்திரிக்கு அவசரமாகக் கூப்பிட்டு போக வேண்டியது இருந்ததால் முழுகாம வேகமாகக் கிழம்பிட்டேன்.. வீட்டுக்குப் போய்தான் முழுகணும் என்றார்.
அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர்.. இதுக்கு மேல அதைப் பற்றிக் கேட்கக் கூடாது என்று நினைத்தவர்.. சரி.. டாக்டருக்கிட்ட அவரை கூப்பிட்டுப் போனீங்களே.. டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்டார்.
அதற்கு பூங்கொடி,..அதுவா..அதிர்ச்சியான சம்பவம் எதுவும் சொல்லக்கூடாது.. மகிழ்ச்சியா வச்சிக்கிட்டா.. நாளடைவில் சரியாகிவிடும் என்று சொல்லி இருக்கார்.. அதைத்தான் செய்யப்போகிறேன் என்று சொல்ல, இன்ஸ்பெக்டர் சரி,சீக்கிரம் அவர் குணமாகட்டும்..அவருக்கு முக்கியமான பணி கொடுத்திருந்தோம்..அதை அவர் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறி கண்ணாயிரத்தையும் பூங்கொடியையும் அனுப்பிவைத்தார்.
மீண்டும் ஆட்டோ..கண்ணாயிரம் வீட்டை நோக்கி விரைந்தது. கண்ணாயிரம் மெல்ல, என்ன..இன்ஸ்பெக்டர் என்ன சொல்லுறாரு..என்று கண்ணாயிரம் கேட்க, அதுவா ,கண்ணாயிரம் வல்லவர்.. நல்லவர்.. அவரை நல்லா பார்த்துக்குங்க என்று சொன்னார் என்று பூங்கொடி சொல்ல ,கண்ணாயிரம் கல கல என்று சிரித்தார்.
ஆட்டோ கண்ணாயிரம் வீடு வந்து சேர்ந்தது. பூங்கொடி கதவை திறந்து உள்ளே செல்ல, கண்ணாயிரம் அவர் பின்னால் செல்ல.. சுடிதார் சுதா மற்றும் இளைஞர்கள் வேகமாக அங்கு வந்தனர். கண்ணாயிரம் அவர்களைப் பார்த்து யார் நீங்க என்று கேட்க, அவர்கள் ஆடிப் போனார்கள்.என்ன கண்ணாயிரம்..எங்களை மறந்திட்டியா என்று கேட்க, கண்ணாயிரம்..நீங்க யாருன்னு சொன்னாதானே எனக்குத் தெரியுதா.. தெரியலையா என்று பார்க்க முடியும் என்றார்.
அதைக்கேட்ட இளைஞர்கள், ம்..தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறானா..சுற்றுலா போனபோது எடுத்த புகைப் படத்தைக்காட்டினாத்தான் சரி வருவார் என்று நினைத்தனர்.
உடனே பிரிண்டு போட்டு எடுத்திட்டுவந்த புகைப்படங்களை எடுத்து ஒவ்வொன்றாகக் காட்ட, கண்ணாயிரம்..ம்.. குற்றாலம் நல்லா இருக்கு.. நீங்க போனீங்களா..நல்லா இருக்கு.யார் இந்த சுடிதார் போட்ட பொண்ணு.. அந்த பொண்ணுக் கூட எல்லா படமும் எடுத்திரிக்கிய.. ஜொள்ளுப் பார்டி நீங்க.. என்றார்.
அதைக்கேட்டதும்..இளைஞர்களுக்கு கோபம் வந்தது. ஏங்க.. நாங்களா ஜொள்ளுப்பார்ட்டி.. இப்பம் பாரும்.. நீர் ஜொள்ளுவிட்ட படத்தை காட்டுகிறோம் என்றபடி..பஸ்சில் படிக்கட்டில் சுடிதார் சுதா கைகொடுத்து கண்ணாயிரத்தை தூக்கிவிடுவதும் அவர் வெட்கத்தில் நெளிவதும் படத்தில் தெரிந்தது.
அதைப்பார்த்த கண்ணாயிரம், யார் இது..பெண் கையைப் பிடித்து பஸ்சுக்குள் ஏறுவது.. இது அபத்தம்..யார் இது.. நான் கடும் கண்டணத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
அவர் அப்படி சொன்னதும்.. ஏங்க..பெண் கையைப் பிடிப்பது நீங்கள்தான்.. என்று சொல்ல, கண்ணாயிரம் கோபமாக, ஏங்க..நான் மைனருங்க.. எனக்கு தலையில் ஏற்பட்ட காயம் கூட மைனர் என்று டாக்டர் சொன்னார். எனக்கு இருபது வயசு ஆகுதுங்க..அந்த பெண்ணின் கையைப் பிடித்த ஆணூக்கு நாப்பத்து ஒன்பது வயசு இருக்குங்க .என்ன என்னை ஏமாளின்னு நினைக்கீங்களா என்று எகிறினார்.
இளைஞர்கள் வேகமாக, ஏங்க பெண்ணின் கையைப் பிடிச்சிருப்பது நீங்கத்தாங்க.. கண்ணாடியிலே உங்க முகத்தைப் பார்த்தது இல்லையா என்று சொல்ல, கண்ணாயிரம் டென்சன் ஆகிவிட்டார்.
அதைப்பார்த்த பூங்கொடி..ஏங்க..அந்தப் படத்தை எங்கிட்ட காட்டுங்க.. நான் பார்த்துச் சொல்கிறேன் என்று இளைஞர்களிடமிருந்து அந்த புகைப்படத்தை வாங்கிப் பார்த்தார்.
சுடிதார் சுதாவும் கண்ணாயிரமும் இருப்பதைப் பார்த்த பூங்கொடி கோபம் அடைந்தார். ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. கண்ணாயிரத்துக்கு அதிர்ச்சி கொடுக்கக் கூடாது என்பதற்காக , புகைப்படத்தை நன்கு உற்றுப்பார்த்துவிட்டு.. இந்தப் படத்தில் இருப்பது இவர் இல்லை.. இவர் எந்த பெண்ணையும் ஏறிட்டுக்கூடப் பார்க்க மாட்டார்.அதனால இந்தப் படத்தில் இருப்பது வேறு யாரோ..என்றார்.
அதைக்கேட்ட இளைஞர்கள்..ம்..இரண்டு பேரும் ஒண்ணுபோல பேசுறீங்க..சுற்றுலா போயிட்டு வந்ததில் உங்களுக்கு என்னமோ ஆயிற்று போல..சுற்றுலா போயிட்டு வந்தவங்களுக்கு இந்த புகைப்படங்களை கொடுக்கிறோம்..உங்களுக்கும் கொடுக்க வந்தோம்..இப்படி பேசுறீங்க என்றனர்.
கண்ணாயிரம்..ஏம்பா..நான் குற்றாலத்துக்கு சுற்றுலாவே போகல..அப்படியிருக்கும் போது இந்த படம் எனக்கு எதற்கு என்க, இளைஞர்கள் என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்தனர்.
சுடிதார் சுதாவும்..கன்னத்தில் விரல்வைத்தபடி என்ன ஆச்சு என்று யோசித்தார்.
ஒருவேளை மனைவி சத்தம் போடுவா என்று நினைத்து நான் அவன் இல்லை என்று சொல்கிறார் போல் என்று நினைத்தார்.
ஏங்க நீங்க என் கையைப் பிடிக்கல..நான்தான் உங்க கையைப் பிடித்தேன்..சுற்றுலா போனபோது பஸ் வேகமாக புறப்பட்டதால நீங்க ஓடிவந்து பஸ்சில் ஏறினீங்க..நீங்க கீழே விழுந்துவிடக்கூடாது என்று நான் உங்களுக்கு கைகொடுத்து தூக்கிவிட்டேன் என்று சொல்ல,கண்ணாயிரம்..நான் சுற்றுலாவே போகலையே..பிறகு எப்படி பஸ்சில் ஏற ஓடி வருவேன்..என்ன பிளாக்மெயில் பண்ணுறீங்களா..என்று கேட்க,சுடிதார்சுதாவும் எதுக்கும் நல்லா நினைச்சுப்பாருங்க..என்றார்.
கண்ணாயிரம்..நீங்க அட்ரஸ் மாறி வந்திட்டிங்க என்று நினைக்கிறேன்..வேறு இடத்திலே விசாரிச்சுப் பாருங்க என்றார்.
பூங்கொடியும்..ஏங்க அவரும் இல்லைன்னு சொல்லுறாரே..பிறகு ஏன் அவரிடம் கேட்கிறீங்க என்று சொல்ல..சுடிதார் சுதா ,என்ன அவர்தான் அப்படி சொல்கிறார் என்றால் இந்த அம்மாவும் இப்படிச் சொல்லுது..இதில் ஏதோ பிரச்சினை இருக்கு என்று நினைத்தார்.
கண்ணாயிரத்திடம்..ஒன்றும் அவசரம் இல்லை..நல்லா யோசிச்சுப் பாருங்க என்று சொல்லிவிட்டு இளைஞர்கள் புடைசூழ புறப்பட்டார்.
அதைக் கண்ணாயிரம் பார்த்தபடி இருந்தார்.ஏதோ யோசித்தார்.பின்னர் ..ஒரு நிமிடம்..என்று கத்தினார். சுடிதார் சுதா திரும்பிப் பார்த்தார். கண்ணாயிரம் உடனே,சுடிதார்..சுடிதார்..என்று சொல்ல, ஆ..கண்ணாயிரத்துக்கு நினைவு வந்துவிட்டது என்று சுடிதார் சுதா மகிழ்ச்சி அடைந்து கண்ணாயிரத்தை நோக்கி திரும்பிவந்தார்.
சொல்லுங்க..சொல்லுங்க..சுடிதார் என்று சொன்னீங்க.மீதி உள்ள பெயரையும் சொல்லுங்க என்க,கண்ணாயிரம் தலை குனிந்த படி..ஏங்க.. இளைஞர்களோட போறீங்க..துப்பட்டாவை நல்லா மூடிக்கிட்டுப் போங்க என்று சொல்ல.. சுடிதார் சுதாவுக்கு சுள் என்று கோபம் வந்தது. துப்பட்டா என்று சொல்ல வேண்டியதுதானே ஏன் சுடிதார் என்று கத்தணும் என்று சுடிதார் சுதா கேட்க..கண்ணாயிரம்.. துப்பட்டா பெயர் உடனே நினைவுக்கு வரல..என்றபடி கீழே கிடந்த துப்பட்டாவை எடுத்து சுடிதார்சுதாவிடம் தலை குனிந்தபடியே கொடுத்தார்.அதைப் பார்த்ததும் சுடிதார் சுதா..சிரித்தபடி துப்பட்டாவை வாங்கி போர்த்தியபடி..நடந்தார்.(தொடரும்) கண்ணாயிரம் கொடுத்த துப்பட்டா..
-வே.தபசுக்குமார்,புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.