கண்ணாயிரம் தூக்க முயன்ற அம்மி/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min readAmmi tries to lift the stone Kannayiram / comedy story / Tabasukumar
23.5.2024
கண்ணாயிரம் பஸ்விபத்தில் சிக்கியதால் பழைய நினைவுகள் மறந்து பேசினார். அவருடன் குற்றாலம் வந்த சுடிதார் சுதா மற்றும் இளைஞர்களையும் அவர் மறந்து யார் நீங்கள் என்று கேட்டார். இதனால் அவர்கள் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார்கள்.
கண்ணாயிரம் மனைவி பூங்கொடி கண்ணாயிரத்தின் மகிழ்ச்சியான பழைய நினைவுகளை கொண்டுவருவது எப்படி என்று யோசித்தார். டி.வியில் பழைய பாடல்கள் ஒளிபரப்பாகும்..அந்தப் பாடல் காட்சியைப் பார்த்தால் கண்ணாயிரம் உற்சாகம் ஆகிவிடுவார் என்று நினைத்தார்.
உடனே..ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்ததில் கொஞ்சம் களைப்பாக இருக்கிய.. டி.வியில் பாட்டு கேளுங்க என்றபடி பழைய பாடல்கள் ஒளிபரப்பாகும் டி.வி சேனலை பார்த்து ரிமோட்டை இயக்கினார்.
அப்போது கல்யாணராமன் படத்தில் காதல் வந்திருச்சி..ஆசையில் ஓடி வந்தேன்..ஒளிபரப்பானது. கண்ணாயிரம் கட்டில் மேல் அமர்ந்து ரசித்துப் பார்த்தார். அடடா..என்ன பாடல்..என்ன நடிப்பு என்று புகழ்ந்தார்.
காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏத்திவச்சேன் என்று கமலஹாசன் பாடவும் பழைய நினைவுகள் மறந்த ஸ்ரீதேவி அந்தப்பாடலைக் கேட்டு பழைய நினைவுகளை நினைத்துப்பார்ப்பதாக காட்சி ஓடிக் கொண்டிருந்தது. நினைவுகள் மறந்தது ஏனம்மா.. கொஞ்சம்பழகிய பாதையைப் பாரம்மா என்று பாடல் ஓடியது..
அதை பூங்கொடியும் பார்த்தார். பாட்டுப்பாடினா பழைய நினைவு வந்திரும்மா என்று யோசித்தார். அப்போது கண்ணாயிரம்..காதல் வந்திருச்சி பாடல் நல்லா இருந்துச்சி அப்புறம் வந்த காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏத்திவச்சேன் பாடல் எனக்கு பிடிக்கல.. ஏன்னா காதல் வந்திருச்சி பாடலில் ஸ்ரீதேவியை நல்லா காட்டுறாங்க.. அடுத்துவந்த காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றிவைத்தேன் பாடலில் ஸ்ரீதேவியை நல்லா காட்டல.. என்று அலுத்துக்கொண்டார்.
பூங்கொடியோ..நாம இளைமைகாலத்தில் இருந்தது போல் ஒல்லி உடம்புடன் பாவாடை தாவணியில் வந்து ஆடினா கண்ணாயிரத்துக்கு பழைய பூங்கொடி நினைப்பு வந்திடும்.. அப்புறம் கணவன் மனைவி ஆகிடலாம் என்று நினைத்தார்.
பூங்கொடி போல் இருந்த உடம்பு இப்படி பூசணிக்காய் மாதிரி மாறிட்டே.. இதை எப்படி குறைக்கலாம்.. சாப்பாட்டை குறைச்சி உடற்பயிற்சி செய்தால் நல்லாயிரும்.. முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்று முடிவு செய்தார்.
கண்ணாயிரம் பலவித யோசனையில் இருந்தார். நான் எப்படி இளைமையாக இருக்கிறேன்.. ஆனா இந்த இளைஞர்கள் என்னப்பார்த்து கண்ணாடியில் முகத்தைப் பார்த்தியளா என்று கேட்கிறானுவ.. எவ்வளவு தினாவெட்டு இருக்கும்..என்றார்.
பூங்கொடியைப் பார்த்து நீங்களே சொல்லுங்க.. நான் இளமையா இருக்கேனா இல்லையா..என்று கேட்டார்.
பூங்கொடி..அதுவா..நீங்க..வசந்தமாளிகை சிவாஜி கணேசன் மாதிரி இருக்கீங்க என்று பாராட்டினார்.
அதைக் கேட்ட கண்ணாயிரம், பார்த்தீங்களா உங்களுக்குத் தெரியுது.. இளைஞர்களுக்கு தெரியமாட்டேங்குது.. அவங்களுக்குப் பொறாமை என்றார்.
பூங்கொடியும்..ஆமா,ஆமா என்று தலையை ஆட்டினார்.
அப்போது பயில்வான் உள்ளே வந்தார். கண்ணாயிரத்தைப் பார்த்து.. என்ன கண்ணாயிரம் நல்லா இருக்கியளா என்று கேட்டார்.
கண்ணாயிரம் அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,யார் நீங்க என்றார்.
பயில்வான் கோபத்தில் நான் பயில்வான் என்று சொல்ல கண்ணாயிரமோ.. அதை நான் எப்படி நம்புவது என்று கேட்டார்.
பயில்வானுக்கு கோபம் வந்தது. என்ன இப்படி பேசுறாரு.. என்ன கண்ணாயிரம்.. நான் பயில்வான் என்கிறதை நம்பமுடியவில்லையா.. என்று பயில்வான் ஆத்திரம் அடைந்தார்.
கண்ணாயிரம்..இதோ பார்..என்றபடி வீட்டுமுன் கிடந்த அம்மியை அலாக்காக ஒற்றக்கையில் தூக்கிக் காட்டினார்.
இப்ப நான் பயில்வான் என்கிறதை நம்புறீயளா என்று கேட்டார்.
உடனே கண்ணாயிரம், ஏங்க.. இதை நான் கூடத்தான் தூக்குவேனே.. அம்மியைத் தூக்கினா பயில்வானா என்க பயில்வான் கோபத்தின் உச்சிக்குச் சென்றார்.
கண்ணாயிரத்தைப் பார்த்து இந்த அம்மியை உங்களால் தூக்க முடியுமா என்று கேட்டபோது கண்ணாயிரம் சிரித்தார். நான் சாதாரண ஆள் இல்லை.. மைனர்.ஆட்டு உரலையேத் தூக்குவேன்.. இந்த அம்மிக்கல் எனக்கு தூசு என்று கண்ணாயிரம் சொன்னார்.
பூங்கொடியோ..என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்தார்.ஆனால கண்ணாயிரம் .. வேட்டியை மடக்கிக்கட்டிக்கொண்டு ..ஆ..ஹா..ஹா..என்று தொடையில் தட்டினார்.
இப்போப் பாருங்க ஒத்தக்கையிலே அம்மியைத் தூக்கிக் காட்டுகிறேன் என்று களத்தில் குதித்தார்.
அம்மிக்கல் அருகே குனிந்து தூக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.பூங்கொடி வேண்டாம் வேண்டாம் வந்திடுங்க..வந்திடுங்க என்றார்.
கண்ணாயிரம் எழமுயன்றார். முடியவில்லை.அம்மியைத் தூக்க குனிந்தவரால் நிமிரமுடியவில்லை. அதை எப்படி சொல்வது என்று திணறிய போது பயில்வான்.. ஒன் டூ. திரி என்று எண்ணினார். (தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.