அகரக்கட்டு அரசு பள்ளிக்கு வர்ணம் பூசிய ஆசிரியர்
1 min readAkarakattu Govt School Painting Teacher
14.5.2024
தென்காசி மாவட்டம் ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட அகரக்கட்டு பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் பள்ளிக்கு வர்ணம் பூசியும், ஆண்டு தோறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான நோட்டுகள், புத்தக பைகள் எழுது பொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறார்.
தென்காசி மாவட்டம், கழூநீர்குளத்தை சேர்ந்தவர் ஷ்யாம் சங்கர் இவர் ஆய்க்குடி அகரகட்டு பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது சொந்த செலவில் ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள், பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டுகள், புத்தகப் பைகள் எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ஆசிரியர் ஷ்யாம் சங்கர் இவ்வருடம் தான் பணியாற்றும் பள்ளியை தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் அவரது சொந்த செலவில் வர்ணம் பூசியும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்கள் வரைந்தும் கொடுத்துள்ளார்
அகர கட்டு அரசு துவக்கப் பள்ளியில் கல்வியின் தரத்தை உயர்த்தவும் மாணவர்களின் சேர்க்கை மற்றும் வருகையை அதிகரிக்கவும் தன்னலம் கருதாது சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர் ஷ்யாம் சங்கருக்கு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.