March 27, 2025

Seithi Saral

Tamil News Channel

இமாசலபிரதேசத்தில் தலாய்லாமாவுடன் அமெரிக்க எம் பி க்கள் சந்திப்பு

1 min read

US MPs meet Dalai Lama in Himachal Pradesh

20.5.2024
சீனாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய் லாமா, இந்தியாவின் இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் தங்கி இருக்கிறார். 1959-ம் ஆண்டு வந்த அவருக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது.தலாய்லாமாவை சந்திக்க செல்வாக்கு மிக்க அமெரிக்க எம் பி க்கள் 7 பேர் நேற்று முன்தினம் தர்மசாலா வந்தனர். டெக்சாஸின் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி.யும், வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவருமான மைக்கேல் மெக்கால் தலைமையிலான இக்குழுவில், ஜனநாயக கட்சியின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியும் உள்ளார்.தர்மசாலாவில் உள்ள தலாய் லாமாவின் ஆசிரமத்துக்கு சென்ற அவர்களை, பள்ளிக்குழந்தைகள், புத்த துறவிகள் மற்றும் பெண் துறவிகள் வரவேற்றனர்.
இதற்கிடையே அமெரிக்க எம் பி க்கள் குழுவினர் தலாய் லாமாவை நேற்று சந்தித்தனர். திபெத் பிரச்சினைக்கு தீர்வு காண சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அமெரிக்கா இயற்றிய மசோதா, ஜனாதிபதி ஜோ பைடனின் கையொப்பத்துக்காக காத்திருக்கும் நிலையில், அது தொடர்பாக தலாய்லாமாவுடன் அமெரிக்க எம் பி க்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.தலாய்லாமாவை ‘ஆபத்தான பிரிவினைவாதி’ என்று அழைக்கும் சீனா, அமெரிக்க எம்.பி.க்களின் இந்த பயணம் குறித்தும், மசோதா குறித்தும் ஆழ்ந்த கவலையை ஏற்கனவே வெளிப்படுத்தி இருந்தது. அமெரிக்க எம் பி க்கள் தலாய்லாமாவை சந்திக்க வேண்டாம் என்றும், இந்த மசோதாவில் ஜனாதிபதி பைடன் கையெழுத்திட கூடாது என்றும் சீன அரசு வலியுறுத்தியது.
சீனாவின் இந்த எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற குழுவினர் தலாய் லாமாவை சந்தித்துள்ளனர். தனது முந்தைய அமெரிக்க பயணங்களின்போது அப்போதைய ஜனாதிபதிகள் உள்பட அமெரிக்க அதிகாரிகளை தலாய் லாமா சந்தித்துள்ளார்.எனினும், ஜோ பைடன் 2021-ம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து இதுவரை அவரை சந்திக்கவில்லை. இதனிடையே, மருத்துவ சிகிச்சைக்காக தலாய்லாமா இந்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளார். அப்போது அவர், ஜோ பைடனை சந்திக்கும் வாய்ப்பு இருக்குமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.