June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

1 min read

There was a heated argument in the Tenkasi District Panchayat Committee meeting

22.6.2024
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து
துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி செயலர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு நடைபெறும் தென்காசி மாவட்ட ஊராட்சி குழுவின் முதல் கூட்டத்தில் மொத்தம் உள்ள 14 கவுன்சிலர்களும் பங்கேற்ற நிலையில், கூட்டத்தின் போது ரூ.2 கோடியே 76 லட்சத்து 68 ஆயிரத்து 603 ரூபாய் மதிப்பீட்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான 5 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த தீர்மானங்கள் மீதான விவாதங்கள் கூட்டத்தின் போது நடைபெற்ற நிலையில், விவாதங்கள் முடிந்து தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டதாக மாவட்ட ஊராட்சி செயலர் சுமதி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் அலுவலக பயன்பாட்டிற்கான செலவினங்கள் மன்ற அங்கீகாரத்திற்காக வந்த போது மாவட்ட கவுன்சிலர் கனிமொழி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வியின் வாகன உபயோக செலவிற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். எந்த ஒரு பகுதிக்கும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட வராத பஞ்சாயத்து தலைவியின் வாகனம் எப்படி இத்தனை கிலோமீட்டர் பயணித்தது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு மாவட்ட ஊராட்சி செயலாளர் சுமதி சரிவர பதிலளிக்கவில்லை எனக்கூறி மாவட்ட பஞ்சாயத்து தலைவி குடும்ப சுற்றுலாவுக்காக கோவாவிற்கு சென்றதை எப்படி அரசு செலவினத்தில் கொண்டு வரலாம் என கேள்வி எழுப்பி குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திய வழக்கில் திமுக மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு பொறுப்பு ஏற்று மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ் செல்வி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் அவர் கட்சியில் இருந்தும் விலக வேண்டும் என்றும் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவிக்கு ஆதரவாக மற்றொரு மாவட்ட கவுன்சிலரான பூங்கொடி மாவட்ட கவுன்சிலரான கனிமொழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே மாவட்ட பஞ்சாயத்து கூட்டமானது பெரும் பரபரப்பானது. உறுப்பினர்களின் கடும் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *