சுரண்டையில் ரூ.1 கோடி நிலம் பத்திரப்பதிவு மோசடி – தந்தை மகன் உட்பட 3 பேர் கைது
1 min read
Rs 1 crore land deed fraud in Surandai – 3 persons including father and son arrested
6.7.2024
தென்காசி மாவட்டம் சுரண்டையில் ரூயாய் 1 கோடி மதிப் பிலான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட தந்தை மகன் உட்பட மூன்று பேர்களை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி அருகே உள்ள சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பாஸ்கர் (வயது 29). இவருக்கு சுரண்டையில் இருந்து இரட்டைகுளம் செல்லும் சாலையில் 48 சென்ட் நிலம் உள்ளது.
இப்பகுதியில் ஒரு சென்ட் நிலம் சுமார் மூன்று லட்சம் வரை விற் பனை செய்யப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் பாஸ்கருக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த டென்னிசன் என்பவர் கம்பி வேலி போட முயற்சி செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த பாஸ்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கம்பி வேலி போடும் பணியை தடுக்க முயற்சித்துள்ளார் இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது டென்னிசன் இந்த இடத்திற்கு தனது பெயரில் பத்திரம் இருப்பதாக கூறி ஒரு பத்திரத்தை காண்பித்து உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் தென்காசி மாவட்ட எஸ்பி சுரேஷ்குமாரிடம் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து எஸ்பி உத்தரவின் பேரில் சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் போலியான ஆவணங்கள் தயாரித்து இந்த பத்திரம் பதிவு செய்தது ஊர்ஜிதமானது. இதை தொடர்ந்து டென்னிசன், அவரதுமகன் தருண் ஆகாஷ் (வயது 25), சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட சிவகுருநாதபுரம் பகுதியைச் சார்ந்த ஆறுமுக நாடார் என்பவரது மகன் முருகன் (வயது 57) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் போலி பத்திரம் தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்தும் சுரண்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் சுரண்டை காவல்துறைக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தனர். தற் போது போலி ஆவணங்கள் மூலம் சுரண்டையில் உள்ள சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை பத்திரப் பதிவு செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.