ஜல்லிக்கட்டு மனுவை விசாரிக்க `பீட்டா’ மீண்டும் முறையீடு
1 min read
‘BETA’ again appeals to investigate jallikattu petition
11.7.2024
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து, ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதித்ததோடு, தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டம் செல்லுபடியாகும் எனவும் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2023-ம் ஆண்டு மே 18-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
சுப்ரீம் கோர்ட்டு அமர்வின் இந்த தீர்ப்புக்கு எதிராக “பீட்டா’ விலங்குகள் நல அமைப்பு சார்பில் கடந்தாண்டு ஜூலை 18-ந் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மறு ஆய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் பட்டிய லிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 8-ந் தேதி பீட்டா அமைப்பின் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திர சூட்டிடம் முறையிட்டார்.
கடந்த ஓராண்டாக இந்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு வராத நிலையில், பீட்டா அமைப்பு சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று (புதன் கிழமை) முறையிட்டார்.
அப்போது, வழக்கின் விவரங்களை மின்னஞ்சல் மூலம் மீண்டும் அனுப்புமாறு அறிவுறுத்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அதை பரிசீலித்த பின்னர் வழக்கு உரிய அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று தெரி வித்தார்.