விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி: 27 பேர் டெபாசிட் இழந்தனர்
1 min read
DMK in Vikravandi by-election. Win: 27 people lost their deposits
13.7.2024
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ம்தேதி நடைபெற்றது.
மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர். இது 82.47 சதவீத வாக்கு பதிவாகும். ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. முதலில் அஞ்சல் வாக்குகளை கொண்ட பெட்டியின் சீல் உடைக்கப்பட்டு, வாக்குகள் பிரிக்கப்பட்டு, 50 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்டப்பட்டு பின்னர் எண்ணப்பட்டன. இந்த பணிகள் முடிந்த பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது..
இந்நிலையில் இறுதியாக வெளியாகி உள்ள முடிவுகளின்படி, தி.மு.க. 1 லட்சத்து 24 ஆயிரத்து 053 வாக்குகளும், பா.ம.க. 56 ஆயிரத்து 296 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி 10 ஆயிரத்து 602 வாக்குகளும் பெற்றுள்ளன.
இதன்படி தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். .
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அன்புமணி, 56 ஆயிரத்து 296 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றதுடன் டெபாசிட்டை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அபிநயா 10,602 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி உள்பட 27 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.