வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு – 2வது நாளாக மீட்புப்பணி
1 min readWayanad landslide: Death toll rises to 200 – Rescue operations continue for 2nd day
31.7.2024
நேற்று முன்தினம் இரவு முதல் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனைத்தொடர்ந்து வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 2வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளது.
94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின், இதுவரை 64 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் 225 பேர் குறித்த விவரங்கள் தெரியாததால் தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 400க்கும் மேற்பட்ட வீடுகளில் தற்போது 40 வீடுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பலர் மாயமாகி உள்ளநிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிரிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த காளிதாஸ், கல்யாண குமார், ஷிஹாப் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.