ஜம்மு-காஷ்மீ்ர் தேர்தலில் 2 தொகுதிகளில் உமர் அப்துல்லா வெற்றி
1 min read
Omar Abdullah wins 2 constituencies in Jammu and Kashmir elections
8.10.2024
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதன்படி, முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் கடந்த 1-ந்தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இந்த தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவருமான உமர் அப்துல்லா பட்காம், கந்தர்பால் ஆகிய 2 தொகுதிகளில் களம் கண்டுள்ளார்.
இந்நிலையில், கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா 32,727 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வேட்பாளர் பஷீர் அகமது மிர் 22,153 வாக்குகள் பெற்று 2ம் இடத்தை பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 10,574 ஆகும்.
அதேபோல கந்தர்பால் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. இஷ்பாக் ஜப்பார் 6,060 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பெற்றுள்ளார். உமர் அப்துல்லா கடந்த 2008ம் ஆண்டு நடத்த தேர்தலில், கந்தர்பால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜம்மு-காஷ்மீரின் முதல்-மந்திரி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.