உமர் அப்துல்லா மீண்டும் காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார்
1 min read
Omar Abdullah again becomes the Chief Minister of Kashmir
8.10.2024
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 56 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 38 இடங்களிலும். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பா.ஜனதா 26, மெகபூபாவின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி-3, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு-2. மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு-1 இடத்தில் முன்னிலையில் உள்ளன. சுயேட்சை 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
இந்தநிலையில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளன. காஷ்மீரில் உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி ஆக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை துணை நிலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உமர் அப்துல்லா 2009 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரை 6 ஆண்டுகள் காஷ்மீர் முதல்- மந்திரியாக பதவி வகித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
10 ஆண்டுகளுக்கு பின் மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளனர். மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வோம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளை வெளியே கொண்டுவர முயற்சிப்போம். இந்துக்கள், முஸ்லீம்கள் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கொண்டுவரும் முயற்சிக்கு இந்தியா கூட்டணி கைகொடுக்கும். ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார். அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறாதது வருத்தமளிக்கிறது. அவர்களின் உட்கட்சி பூசல்களால் இது நடந்தது என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.