தென்காசியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க அமைச்சரிடம் டாக்டர் அப்துல் அஜீஸ் கோரிக்கை
1 min read
Dr. Abdul Aziz request to minister to set up medical college hospital in Tenkasi
23.10.2024
தென்காசியில் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட மருத்துவர்கள் சார்பாக,
இந்திய மருத்துவ சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் டாக்டர் எம்.அப்துல் அஜீஸ் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியனை இந்திய மருத்துவ சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் டாக்டர் எம் அப்துல் அஜீஸ் சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்ட மருத்துவமனை கடந்த 1986 ம் ஆண்டு முதல் மாவட்ட தலைமையக மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்ட பொதுமக்களின் நீண்ட கால மற்றும் தொடர்ச்சியான கோரிக்கைக்கு பிறகு 2019 இல் தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் உருவானதில் இருந்து, தென்காசியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
மூன்றாம் நிலை சிகிச்சை மற்றும் பல் உறுப்பு செயலிழப்பு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி நிர்வாகம் ஆகியவற்றுக்கு பொது மக்கள் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும்.
எங்கள் தென்காசி மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்று வருகின்றனர். அதில் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் தங்கும் விடுதி மற்றும் போக்குவரத்துக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.
மேலும், தென்காசி குற்றாலம், சங்கரன்கோவில் இலஞ்சி ஆகிய பகுதிகள் சுற்றுலா பகுதியாகும்.
நவம்பர் 15 முதல் ஜனவரி 15 வரை (60 நாட்கள்) லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வழியாகவே சபரிமலைக்கு செல்கின்றனர்.அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அருகில் உள்ள தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதில்லை.
தென்காசியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கினால் மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வருங்காலத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கும் நோக்கத்துடன் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்காக 33 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார்.
துரதிருஷ்டவசமாக 2019 இல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்டுமானத்திற்காக 15 ஏக்கர் திருப்பி விடப்பட்டது.
இப்போது 18 ஏக்கர் மட்டுமே உள்ளது. மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி விதிமுறைகளின்படி 25 ஏக்கர் தேவை. எனவே தென்காசி மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு ஏற்ற இடத்தைக் கண்டறிந்து 2025-26ஆம் கல்வியாண்டில் மருத்துவக் கல்லூரியைத் தொடங்குமாறு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் தென்காசி மருத்துவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களின் கோரிக்கையை விரைவில் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு இந்திய மருத்துவ சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர்
டாக்டர்.எம்.அப்துல் அஜீஸ் அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார். கோரிக்கை மனுனை பெற்றுக் கொண்ட அமைச்சர் மா சுப்பிரமணியன் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் போது தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தென்காசி நகர் மன்றத்தலைவரும், தென்காசி நகர திமுக செயலாளருமான ஆர்.சாதிர் ஆகியோர் உடன் இருந்தனர்.