ஒரே நாளில் 25 அடி உயர்ந்த சேர்வலாறு அணை நீர்மட்டம்
1 min read
Servalaru Dam water level rose by 25 feet in a single day.
2.8.2026
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்ந்தது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையில் பரவ லாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டித்தீர்த்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. தென் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக திகழும் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் காலையில் வினாடிக்கு 898 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 63.40 அடியாக இருந்தது. நேற்று காலையில் அணைக்கு வினாடிக்கு 5,083 கன அடியாக அதிகரித்ததால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் சுமார் 5 அடி உயர்ந்து 68.35 அடியை எட்டியது.
மேலும் அதன் அருகே உள்ள உச்ச நீர்மட்டம் 156 அடி கொண்ட சேர்வ லாறு அணை நீர்மட்டம் 76.77 அடியில் இருந்து ஒரே நாளில் சுமார் 25 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது. தொடர்ந்து அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
இதேபோன்று மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.