அமித்ஷா மீது குற்றச்சாட்டு: கனடா தூதருக்கு இந்தியா சம்மன்
1 min read
Allegation against Amit Shah: India summons Canadian ambassador
2.11.2024
கனடாவை சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா ஆரம்பம் முதலே குற்றஞ்சாட்டி வருகிறது. கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறினார். ஆதாரங்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் ஆனால் அவற்றை இந்தியா ஏற்கவில்லை என்றும் ட்ரூடோ கூறினார்.
இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.
இதனிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை துணை மந்திரி டேவிட் மோரிசன் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் விவகாரத்தில் அமித்ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் கனடா தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. உள்துறை மந்திரி அமித்ஷா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக கூறி கனடா தூதருக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.