பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் செல்போன் கடை உரிமையாளர் பிணம்
1 min readCell phone shop owner found rotting in locked house
9.11.2024
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மிட்டாதார்குளம் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் (வயது 38). இவர் பி.எம்.சி. மார்க்கெட்டில் செல்போன் கடை நடத்தி வந்தார்.
இதற்காக மணலிவிளை எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டின் கதவு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்தது. இந்த வீட்டில் இருந்து பிணவாடை வீசுவதாக அப்பகுதி மக்கள் திசையன்விளை போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தரையில் அழுகிய நிலையில் மார்ட்டின் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரது மனைவி பியூலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பியூலா ஆஸ்பத்திரியில் தங்கி மகளை கவனித்து வருகிறார். இதனால் மார்ட்டின் திசையன்விளையில் தனியாக வசித்து வந்தார்.
அவருக்கும் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.