முன்னாள் அ,தி.மு.க. அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்
1 min read
Former AIADMK ministers join DWK
6.6.2026
சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றுள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தி.மு.க., அ.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் த.வெ.க-வில் இணைந்து வருகின்றனர்.
பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அலுவலகங்களில் தினந்தோறும் ஏராளமானோர் த.வெ.க.வில் இணைவதற்கு திரண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகம் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், என்.ஆர்.சிவபதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் த.வெ.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இணைந்தனர்.
இந்நிலையில், தவெக-வில் இணைந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில்,”ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய விஜய் வாழ்கின்ற காலம் வரை முதலமைச்சராக வாழ்வார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தவெகவில் இணைய தாயுள்ளத்தோடு ஒப்புதல் அளித்த பொற்கால முதலமைச்சர் விஜய்க்கு நன்றி.
திமுக என்ற தீய சக்தியை அழிக்க தூய சக்தியாம் தவெக வரவேண்டியது என்பது காலத்தின் கட்டாயம்.
உங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.