June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

விரைவில் ராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து; பிரதமர் மோடி தகவல்

1 min read

Rameswaram-Thalaimannar shipping service to start soon; PM Modi announces

16.12.2024
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றார். இதையடுத்து, இலங்கையின் 9-வது அதிபராக திசநாயகே பதவியேற்றார்.

இலங்கையின் அதிபராக அநுர குமார பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த அநுர குமாரவை நேற்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை அதிபர் அநுர குமாரவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று பிரதமர் மோடியை இலங்கை அதிபர் சந்தித்தார்.

அப்போது இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து, இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
பின்னர், நிருபர்கள் சந்திப்பில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே கூறியதாவது:-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியாவின் சிறப்பான வரவேற்புக்கு நன்றி.
இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இந்திய மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படும். மக்களுக்கான சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. நிதி நெருக்கடியை இலங்கை சந்தித்த போது, இந்தியா உதவி செய்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பிரதமர் மோடி கூறியதாவது:
மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அணுக வேண்டும். ராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இந்தியா இலங்கை உறவு வலுப்படும். பெட்ரோலியம், எரிவாயு, சூரிய ஒளி, மின்சார துறைகளில் ஒத்துழைப்பு வலுப்படும்.
நமது திட்டங்கள் அனைத்தும் இலங்கையின் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றன. காங்கேசன் துறைமுகத்தை புனரமைக்க நிதி உதவி அளிக்கப்படும். இயற்கை பேரிடரின் போதும் நிவாரணம் உள்ளிட்ட பணிகளில் ஒத்துழைப்பு அளிக்கப்படும். இலங்கையின் பால் வளம் மீன்வளத்துறை வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி அளிக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவுக்கு ஜனாதிபதி மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *