கண்ணாயிரம் தவறவிட்ட ரெயில்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min read
Kannayiram missed the train/comedy story/Tapasukumar
18.12.2024
கண்ணாயிரம் புதுவையிலிருந்து சென்னை செல்ல ரெயில் டிக்கெட் எடுக்க ரெயில் நிலையம் சென்றபோது வேட்டிக்குள் புகுந்த கடுடெறும்பு கடித்ததால் பாத்ரூமுக்குள் ஓடி கதவை பூட்டினார்.
கட்டெறும்பை அகற்ற முயன்றபோது வெளியில் நின்ற ஒருவர் கதவைத் தட்ட கண்ணாயிரம் கழற்றிய வேட்டியை கையில் பிடித்தபடி கதவைத் திறந்து எட்டிப்பார்க்க, வெளியே நின்றவர் அந்த காட்சியைப் பார்த்து மயங்கி விழுந்தார்.
கண்ணாயிரம் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து இது என்னடா வம்பாப் போச்சு.. வேட்டி இல்லாம பார்த்ததால மயங்கிட்டாருபோல, வேட்டியை உடுத்துக்கிட்டு பக்கத்திலே போவோம் என்று வேட்டியை உடுத்திக்கொண்டு அருகில் சென்றார்.
ஹலோ..ஹலோ.. என்று சொல்லிப்பார்த்தார். அவர் அசையவில்லை. பெயர் தெரிஞ்சா.. பெயர் சொல்லிக் கூப்பிடலாம்.. பெயர் தெரியாதே.. என்ன செய்யலாம்.. யோவ்.. யோவ்.. யோவ் என்று கூப்பிட்டுப்பார்த்தார். அப்போதும் சத்தம் இல்லை. என்ன சவுண்டையேக் காணம்.. தண்ணி தெளிச்சிப் பார்ப்போம் என்றபடி.. குழாயிலிருந்து கையில் தண்ணீர் பிடித்தபடி ஓடி வந்து அவரது முகத்தில் ஊற்றினார்.
அவர் லேசாக விழித்துப்பார்த்தார். ரெயில் போயிட்டா.. ரெயில் போயிட்டா என்று கேட்டபடி எழுந்தவர்.. ஏய்யா வேட்டி இல்லாம வந்த என்று கண்ணாயிரத்தை திட்டினார்.
கண்ணாயிரம்..யோவ், வேட்டியோடத்தான வந்திருக்கேன் என்க, இப்போ இல்லை.. அப்போ என்று அவர் சொல்ல, கண்ணாயிரம், அப்போ நான் வேட்டியோடதான் வந்தேன் என்ன.. வேட்டியை கழற்றி கையில் வைத்திருந்தேன். நீங்க சரியாப் பார்க்கலையா என்று கேட்டார்.
அவர்..யோவ், நீ வேட்டியை உடுக்காம வந்ததை சரியாப் பார்த்ததாலத்தான் மயங்கி விழுந்தேன்.. போரூம் அங்கே நான் அவசரமாகப் போகணும் என்றார்.
கண்ணாயிரமும், நானும் அவசரமாகப் போகணும் என்க, அவர் கோபமாக, யோவ் இப்போதான போயிட்டு வந்தீர்..மறுபடியும் அவசரமாகப் போகணூம் என்கிறீர். இது அநியாயமய்யா என்றார்.
கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது. ஏய்யா,நான் ரெயில் டிக்கெட் எடுக்க அவசரமாகப் போகணும்.. ஆளை விடும் என்க, அவரோ.. ஓ.. நீங்க அந்த அவசரத்தைச் சொன்னீங்களா.. நான் பாத்ரூம் அவசரத்தைச் சொன்னேன் என்க கண்ணாயிரம்.. யோவ் ஆளைவிடுய்யா.. என்க, அவசரம் என்றபடி கண்ணாயிரம் ரெயில் நிலையத்தை நோக்கி ஓடினார்.
அங்கே கூட்டம் குறையவில்லை. என்னது இப்படி நிக்கிறாங்க.. நான் எங்கே நிப்பது.. ஏற்கனவே மூன்றாவது இடத்திலே நின்றேன். எறும்பு கடிச்சதாலே வெளியே ஓடிட்டேன் என்றபடி, கூட்டத்தின் முன்வரிசைக்குப் போனார்.
வரிசையில் மூன்றாவது நின்றவரிடம், ஏங்க இது என் இடம், கொஞ்சம் விலகுங்கள். நான் நிற்கிறேன் என்றார்.
மூன்றாவது நின்றவர் கோபம் அடைந்தார். என்னய்யா..உமரு இடமுன்னு எங்கே எழுதிவச்சிருக்கு என்று கேட்க கண்ணாயிரத்துக்கும் கோபம் வந்தது.
யோவ், உமரு இடமுன்னு எங்கே எழுதிவச்சிருக்கு.. சொல்லும் என்க, மூன்றாவது நின்றவர், என்னய்யா கொடுமை பண்ணுற.. மூன்றாவது இடம் என் இடம்தானய்யா என்க, அடுத்து முதலில் நின்றவர் டிக்கெட் எடுத்துவிட்டு அகல, மூன்றாம் இடத்தில் நின்றவர் இரண்டாம் இடத்துக்கு வந்தார்.
கண்ணாயிரம் அவரிடம் மூன்றாவது இடம்தான் உங்க இடம் என்று சொன்னீங்க.. நீங்க அந்த இடத்திலே நில்லுங்க.. நான் இரண்டாம் இடத்தில் நிக்கிறேன் என்றவாறு கண்ணாயிரம் வரிசையில் புகுந்து, இரண்டாம் இடத்தில் நின்றார்.
அப்பாட..இரண்டாம் இடத்தைப் பிடிக்க எவ்வளவு கஷ்டப்படவேண்டியது இருக்கு என்றவாறு ஒரு வெற்றி வீரனைப் போல, காலரை தூக்கிவிட்டுக்கொண்டு நின்றார்.
மூன்றாவது நின்றவர் முறைக்க, கண்ணாயிரம் சிரித்துக்கொண்டார்.
முன்னால் நின்றவர் டிக்கெட்டு எடுத்துவிட்டு நகர, கண்ணாயிரம் ஒன்றாவது இடத்துக்கு வந்தார். வியர்வையில் நனைந்த முகத்தை தடவிவிட்டவாறு கவுண்டருக்குள் கையைவிட்டார்.
டிக்கெட் கொடுக்கும் ஊழியர் எங்கே போகணும்.. என்று கேட்க, கண்ணாயிரம் தாம்பரம், தாம்பரம் என்றார்.
பேசஞ்சரா.. எக்ஸ்பிரசா என்று ஊழியர் கேட்டபோது.. நான் பேசஞ்சர்தான் என்று கண்ணாயிரம் உளறினார்.
ரூபாயை கொடுங்க என்று ஊழியர் சொல்ல, கண்ணாயிரம் வேட்டியைத் தூக்கினார். வழக்கமாக பாதுகாப்பாக ஜட்டிக்குள் பணம் வைத்துவருவது வழக்கம். இன்னைக்கு ஜட்டியே போட மறந்திட்டேனே.. அப்போ பணத்தை எங்கே வச்சேன் என்றவாறு சட்டைப்பைக்குள் பார்த்தார்.
அங்கு இருந்து ரூபாயை எடுத்து ஊழியரிடம் கொடுத்துவிட்டு பாசஞ்சர் ரெயிலுக்கு டிக்கெட் வாங்கினார்.
அப்பாட ஒரு வழியாக டிக்கெட் வாங்கியாச்சு.. வீட்டிலே போய் பக்கெட்டில தாமிரபரணி தண்ணீரை எடுத்துக்கிட்டு வரவேண்டியதுதான்.. வரும்போதே எடுத்திட்டுவந்திருக்கலாம். எல்லாம் அவசரம். என்னபண்ணுறது.. என்றபடி வீட்டுக்கு ஓடினார்.
ஒருபையில் சட்டை ,வேட்டியை எடுத்துவைத்தார். கள்ள நோட்டு கும்பல் தலைவன் போட்டோ இருந்தது. ஆமா.. இவனை வேற கண்டுபிடிக்கணும். போட்டோவை பைக்குள் வச்சிக்கிடுவோம் என்றவாறு போட்டோவை எடுத்துவைத்தார்.
எங்கேயோ பதுங்கியிருக்கான்.. நூறு ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து என்னை ஏமாத்திட்டு ஓடிட்டான்.. எப்படியாவது அவனை பிடிச்சு நல்ல நூறு ரூபாய் நோட்டை வாங்கணும்.. விடப்படாது என்று நினைத்தார்.
தாமிரபரணி தண்ணீர் இருந்த பக்கெட்டை கொண்டு போகணுமே.. பூங்கொடி பெரிய பை இருந்தா எடு என்றார்.
பூங்கொடி பெரிய பையை எடுத்துக்கொடுத்தபடி, ஏங்க ரெயில் டைம் என்ன என்று கேட்டாள். கண்ணாயிரம் டிக்கெட்டை எடுத்துப்பார்த்தார். அதில் 18 என்று மணி போட்டிருந்தது. இது என்ன இப்படி போட்டிருக்காங்க.. 12 மணி வரைக்கும்தானே நமக்குத் தெரியும். இப்படிப் போட்டா எப்படி.. பூங்கொடி கவலைப்படாதே..நான் வரும்வரைக்கும் ரெயில் நிக்கும்.. எப்படியும் ஏறிப் போயிடுவேன்..என்றார்.
பூங்கொடியோ..ஏங்க.. யாரும் பிஸ்கட், கடலை மிட்டாய் கொடுத்தா வாங்கித் தின்னாதீங்க.. உங்களை மயங்கவச்சி ரூபாயை அடிச்சிட்டுப் போயிடுவாங்க என்க, கண்ணாயிரம்.. ஆமா, பூங்கொடி.. என் கால் சட்டையை நல்லா உதறி எடுத்துட்டுவா.. எறும்பு கிறும்பு இருந்திடப்போகுது.. கடி தாங்க முடியாது.
ஏற்கனவே.. வேட்டியிலிருந்த கட்டெறும்பால, டிக்கெட் எடுக்க முடியாம கஷ்டப்பட்டேன் என்றார்.
பூங்கொடி , ஏங்க ஏற்கனவே சொன்னேன்.. நீங்கதான் கேட்காமப் போனீங்க.. என்றவாறு புது வேட்டி, ஜட்டி, சட்டையை எடுத்து நல்லா உதறிவிட்டு கண்ணாயிரத்திடம் கொடுத்தார்.
அவர் கிழக்கு பார்த்து நின்றபடி வேட்டி சட்டையை வாங்கி உடுத்தினார்.
பின்னர் தனது தாய் படத்தை வணங்கிவிட்டு பக்கெட்டு பை, வேட்டி சட்டை பையை எடுத்துக்கொண்டார்.
பணத்தை எடுத்து ஒரு பாலதீன்பையில் சுற்றி கால்சட்டைப் பைக்குள் வைத்தார்.
பூங்கொடியிடம் என்ன நான் எங்கே என்று கேட்டால் தெரியாது என்று சொல்லு, யாரிடமும் ரகசியத்தைச் சொல்லாத என்றபடி வேகமாகப் புறப்பட்டார்.
செருப்பு போடலையா என்று பூங்கொடி கேட்க, வேண்டாம்..கழற்றிப் போடுற இடத்திலே யாரும் எடுத்திட்டுப் போயிருவாங்க.. என்று சொல்லியவாறு புறப்பட்டார்.
பூங்கொடி கையசைத்து வழியனுப்பிவைக்க, கண்ணாயிரம் வெற்றி நடை போட்டு ரெயில் நிலையத்தை நோக்கி நடந்தார்.
ம்..எப்படியும் தாமிரபரணி தண்ணீரில் இருந்து தாமிரத்தைப் பிரித்தெடுத்து விற்று ஜவுளிக்கடைக்காரருக்கு பணத்தைக் கொடுத்துப்புடணும். பாக்கி இருக்கப்படாது.. என்றவாறு வேகமாக நடந்தார்.
அவர் ரெயில் நிலையத்தை அடைந்தபோது அவர் செல்லவேண்டிய பாசஞ்சர் ரெயில் சென்று கொண்டிருந்தது.
ரெயிலை தவறவிட்டதை அறியாமல் கண்ணாயிரம் ரெயில்வே பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்,புதுவை.