June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் விழாவில் தீவிரவாதிகள்

1 min read

Terrorists at the Kannayiram festival

21.10.2025
தீவிரவாதிகளை காட்டிக் கொடுத்த கண்ணாயிரத்துக்கு அன்று பாராட்டுவிழா. கம்பன் கலை அரங்கில் விழாக்கோலம்.அரங்கத்தைச் சுற்றி போலீஸ்பாதுகாப்பு.
லாஸ்பேட்டையிலிருந்து சாரட்டு வண்டியில் கண்ணாயிரம் அவரது மனைவி பூங்கொடி ஆகியோர் வந்தனர். கண்ணாயிரம் ரசிகர்கள் சாரட் வண்டியைப் பின்தொடர்ந்து வந்தார்கள். முன்னால் வாத்திய குழுவினர் பூமழை தூவி வசந்தங்கள் வாழ்க என்ற பாடலை ஒலித்தபடி சீருடையில் சென்றனர்.
கண்ணாயிரம் மாமனார் பேண்ட் சட்டை போட்டு கருப்பு கண்ணாடி, தொப்பி அணிந்து ஆடிப்பாடியபடி சென்றார்கள். பயில்வான், சுடிதார் சுதா, இறைச்சி கடைக்காரர், ஜவுளிக்கடைக்காரர், மோட்டார் சைக்கிள் வாலிபர் ஆகியோர் புத்தாடை அணிந்து சிரித்து பேசியபடி சென்றார்கள்.
அருவை அமாவாசை பேண்ட் சட்டை போட்டிருப்பதைப் பார்த்த ஜவுளிக்கடை வீரர் ஆச்சிரியம் அடைந்தார். என்ன அருவாஅமாவாசை.. பேண்ட்-சட்டையில் அசத்திரியரு என்று கேட்க, அருவாஅமாவாசை, குட்மார்னிங்சார். நைஸ்அ மீட்யூ.டுடே வொண்டர்புள்டே, என்று பேசிக்கொண்டே போனார்.
ஜவுளிக்கடைக்காரர் அதிர்ச்சியானார். என்ன அருவாஅமாவாசை இங்கிலீசில புழந்துகட்டுறாரு. நல்ல முன்னேற்றம்தான் என்று பாராட்டினார்.
கண்ணாயிரம் சாரட்வண்டியில் இருந்தபடி அனைவருக்கும் வணக்கம் செலுத்தியபடி சென்றார்.
பேண்ட் குழுவினர், வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதைவாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும் என்று பாடல் இசைத்தவாறு சென்றனர்.
வாணவேடிக்கை முழங்கியது. கரகாட்டக் குழுவினர், சித்தாடைக் கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாட வந்தாளாம்.. என்று ஆடிப்பாடியவாறு சென்றனர்
யாரடி நீ மோகனி என்ற பாடல் பாடுங்கள் என்று கண்ணாயிரம் கேட்டுக்கொள்ள, கரகாட்டக்குழுவினர் அந்தப் பாடலை பாடி ஆடினர்.
பூங்கொடியும் உற்சாகமாக இருந்தார். பெண்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். பூங்கொடிக்கு வந்த வாழ்வைப்பாருங்கள்..சாதாரணமாக இருந்த பூங்கொடி இன்னைக்கு சாரட்வண்டியிலே போறா.. எல்லாம் கண்ணாயிரம் யோகம்தான் என்று பாராட்டினர்.
துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுத்து சென்றனர்.
ஊர்வலம் கம்பன் கலைஅரங்கத்தைச் சென்றடைந்தது. கண்ணாயிரம் வாழ்க கண்ணாயிரம் வாழ்க என்ற கோஷம் எழுந்தது.
கண்ணாயிரம் பி.ஏ. என்று எழுதி பெரிய கட்அவுட்வைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்த கண்ணாயிரம் அதிர்ச்சி அடைந்தார். மோட்டார் சைக்கிள் வாலிபர் அருகில் வந்து, கட்அவுட் எப்படியருக்கு என்று கேட்க, கண்ணாயிரம் டூமச் என்றார். என்ன சொல்லுறீங்க என்று மோட்டார்சைக்கிள் வாலிபர் கேட்க, ஏய் நான் 8_ ம் வகுப்பு பெயிலு. அப்படியிருக்கும் போது கண்ணாயிரம் பீ.ஏ அப்படின்னு போடலாம் என்க, அதற்கு அவன் சிரித்தான். அதா கட்அவ்ட் ரெடி பண்ணியவன், உங்க இனிசியல் என்ன என்று கேட்டான். பீ.ஏ என்று சொன்னேன். அதை முன்னே போடுறதுக்குப் பதிலாக பின்னே போட்டுட்டான். என்னடான்னு கேட்டா, முன்னப் பின்ன இருக்கும் கண்டுக்காதீங்க என்று சொல்லிவிட்டு ஓடிட்டான் என்க, நீயும் ஓடிரு.. என்று கண்ணாயிரம் விரட்டினார்.

கண்ணாயிரத்தையும் பூங்கொடியையும் போலீசார் பாதுகாப்புடன் மேடைக்கு அழைத்துச் சென்றனர். பேண்ட் சட்டை போட்டிருந்த அருவாஅமாவாசையை போலீசார் சந்தேகப்பட்டு வழிமடக்கினர். யார்யா நீ என்று கேட்க, நான் கண்ணாயிரம் மாமனார் என்று சொல்ல, போலீசார் அவரிடம், அவர் வேட்டி சட்டையெல்லா போட்டிருப்பார்.. நீ பேண்ட் சட்டை போட்டிருக்க.. ஏமாத்தப் பாக்கிறீயா என்று கேட்க, அருவாஅமாவாசை, அய்யா,! நான் வேட்டி சட்டையில் வந்தா விடமாட்டிங்க என்று நினைத்து பேண்ட் சட்டையில் வந்தேன். நீங்க என்னடான்னா ..பேண்ட் சட்டையிலே வந்த என்னைவிட மாட்டீங்கிறீங்க.. மாப்புளே.. கண்ணாயிரம் மாப்புளே.. என்னை போலீஸ் உள்ளே விடமாட்டேங்கிறாங்க.. என்று கத்த, கண்ணாயிரம் திரும்பிப் பார்த்தார்.
போலீசாரிடம் கை அசைத்து அவரை விட்டுவிடுங்கள் என்க, அருவாஅமாவாசையை உள்ளே அனுமதித்தனர்.
அவரும்..என் மாப்புள சொன்னா.. போலீசே கேட்கும். ம்கும்.. நான் யாரு.. கண்ணாயிரம் மாமனாராக்கும் என்றபடி மேடை அருகே சென்றார்.

மேடையில் நடுவில் கண்ணாயிரம், அவரது மனைவி பூங்கொடி அமர்ந்தனர்.அடுத்து போலீஸ் அதிகாரிகள் அமர்ந்தனர். அப்போது போலீஸ்படை சூழ அமைச்சர் வந்தார். கண்ணாயிரத்துக்கு அவர் வணக்கம் சொல்ல, கண்ணாயிரம் எழுந்து நின்று வணங்கினார்.மேடை பரபரப்பானது.
கண்ணாயிரத்துக்கு ஊர்மக்கள் சார்பில், ஜவுளிக்கடைக்காரர் பொன்னாடை போர்த்தினார். எங்கள் அண்ணன் கலியுக மன்னன் பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி, தீவிரவாதிகளை கண்டுபிடித்து கொடுத்த சிங்கம்.. எங்கள் தங்கம் என்று பாராட்டினார்.
அடுத்ததாக பயில்வான் வந்து பொன்னாடை போர்த்தினார். கண்ணாயிரம் எங்கள் நண்பர். எல்லோருக்கும் தோழர். அவர் அப்பாவி என்று எல்லோரும் நினைத்தார்கள். அவர் தீவிரவாதிகளை கண்டுபிடித்து கொடுத்த வீரர். அவருக்கு எங்கள் பாராட்டுகள் என்று கூறினார்.
சுடிதார் சுதா ஒரு பெரிய பொன்னாடையுடன் வர, கண்ணாயிரம் எழுந்து நின்றார். சுடிதார் சுதா, கண்ணாயிரத்தைப் புகழ்ந்தார். நேற்று வரை கண்ணாயிரம் அப்பாவி. இன்று முதல் அவர் மாவீரர். எதற்கும் அஞ்சாதவர்.அவரைப் பாராட்டுவதில் நாங்கள் பெருமைபடுகிறோம் என்று பொன்னாடையைப் போர்த்தவர, கண்ணாயிரம் கைகளில் வாங்கிக்கொண்டார்.
பூங்கொடி சிரிக்க, சுடிதார்சுதா அவருக்கு ஒரு பொன்னாடை போர்த்தினார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வார்கள். அதேபோல் கண்ணாயிரம் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார்
அது யார் தெரியுமா? இந்த பூங்கொடிதான் என்று பாராட்டினாள்.
அனைவரும் கரகோஷம் செய்தனர்.

அடுத்ததாக அமைச்சர் எழுந்தார். கண்ணாயிரத்துக்கு ஒரு பொன்னாடை போர்த்திவிட்டு பேசினார். அவையோரே! அனைவருக்கும் வணக்கம். இந்த கண்ணாயிரம் புதுவைக்கு கிடைத்த பொக்கிஷம்.அவரை இன்று உலகமே பாராட்டுகிறது.அவரால் புதுவைக்குப் பெருமை கிடைத்திருக்கிறது. தீவிரவாதிகளை பிடிக்க போலீசார் பலகோடி செலவு செய்து வந்த நிலையில், கண்ணாயிரம் ஒரு நொடியில் தீவிரவாதிகளை பிடித்துகொடுத்துவிட்டார். அவரது துணிச்சலைப் பாராட்டி தமிழக போலீஸ் இலாகா ரூ.5 லட்சம் பரிசு வழங்கி உள்ளது. இந்த தொகையை அவரிடம் வழங்குகிறேன் என்க, கண்ணாயிரம் எழுந்தார்.அவரிடம் அமைச்சர் கொடுத்தார். அப்போது கண்ணாயிரம் அதை வாங்கிக் கொண்டார்.
இது கண்ணாயிரத்துக்கு கிடைத்த பரிசு அல்ல.புதுவை மக்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு. எனவே இந்த தொகையை புதுவை மக்களுக்கு பயன்படும் வகையில் முதல் அமைச்சர் நிவாரண நிதியாக வழங்குகிறேன் என்று சொல்ல, கூட்டத்தில் கரகோஷம் எழுந்தது.

அமைச்சரிடம் அவர் அந்த தொகைக்கான காசோலையை வழங்கினார். அமைச்சர் அவரை ஆரத்தழுவிக் கொண்டார்.
கண்ணாயிரம் இப்போது பேசுவார் என்று அமைச்சர் சொல்ல,கண்ணாயகரம் மைக்கில் பேசினார்.
என் அருமை மக்களே! அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். நான் நேற்று வரை உலகம் அறியாத அப்பாவி. இப்போது உலகமே அறிந்த மாவீரன்.
இறைவனின் படைப்பில் எல்லோரிடமும் ஒரு திறமை இருக்கிறது.அது வெளிப்படுத்த வாய்ப்புதான் கிடைப்பதில்லை. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.நான் தீவிரவாதியை அடையாளம் காட்டினேன்.போலீசார் அவர்களை பிடித்துவிட்டனர். பரிசை எதிர்பார்த்து நான் இதைச் செய்யவில்லை. பாரத மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவே தீவிரவாதிகளை காட்டிக்கொடுத்தேன் என்று கூறிய போது கூட்டத்தின் இறுதியில் போலீஸ்உடையில் நின்ற நான்கு பேரின் விழிகள் ஒருமாதிரி விழிக்க, கண்ணாயிரத்துக்கு சந்தேகம் வந்தது.
தீவிரவாதிகள் முரட்டுத்தனமாக பயங்கர உடையில் வருவார்கள் என்று நினைக்க வேண்டாம். போலீஸ் உடையிலும் அவர்கள் மறைந்துவரலாம். மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சொல்ல, கூட்டத்தில் இறுதியில் போலீஸ் வேடத்தில் நின்ற தீவிரவாதிகள் உஷாராகி வெளியே புறப்ப தயாரான போது தமிழக போலீசார் அங்கு விரைந்தனர். ஒட்டு மீசை தாடியுடன் இருந்த நான்கு பேரை மடக்கிப்பிடிக்க முயன்றனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். தமிழக போலீசாரும் புதுவை போலீசாரும் அவர்களை நோக்கி திருப்பிச் சுட்டனர். தீவிரவாதிகள் சுட்டுக்கொண்டே தப்பிக்க முயன்றபோது எந்திர துப்பாக்கியுடன் நின்ற போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர். தப்ப முடியாது என்று நினைத்து சரண் அடைந்த அவர்களை தமிழக போலீஸ் டிஜிபி.கைது செய்தார்.அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி சென்னைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
தமிழக டி.ஜி.பி மேடைக்கு வந்தார். கண்ணாயிரத்துக்கு ஒரு பொன்னாடை போர்த்தினார். கண்ணாயிரத்துக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருந்தது. அவருக்கு நடக்கும் பாராட்டுவிழாவில் அவரை தீர்த்துக்கட்ட தீர்மானித்தனர். அதனால் விழா நடக்கும் இடத்தை நாங்கள் கண்காணித்தபடி இருந்தோம். போலீஸ் உடையிலும் தீவிரவாதிகள் இருப்பார்கள் என்று கண்ணாயிரம் சொன்னபோது நாங்கள் உஷாரானோம். போலீஸ் உடையில் சந்தேகப்படும்படியாக நின்ற நான்கு பேரை மடக்கினோம்.எல்லாவற்றுக்கும் கண்ணாயிரமே காரணம் என்று பாராட்டினார்.
கண்ணாயிரம் மனம் குளிர்ந்தது. அமைச்சர் அவரது கைகளை குலுக்கி வாழ்த்தினார்.

அப்போது கோடீஸ்வரர் மேடைக்கு வந்தார். கண்ணாயிரத்துக்கு நான் அதிக கடமைப்பட்டுள்ளேன்.என் மகனை கடத்தல்காரர்களிடமிருந்து மீட்ட அவருக்கு ரூ.பத்து கோடி வழங்குகிறேன் என்று ஒரு காசோலையை வழங்கினார். கண்ணாயிரம் அதைப் பெற்றுக் கொண்டார். என் இனிய புதுவை மக்களே! இது எனக்கு கிடைத்த பரிசு அல்ல. புதுவை மக்களுக்கு சேரவேண்டிய பரிசு.நான் இந்த தொகையை கொண்டு பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை தொடங்குவேன். அதன் மூலம்,புதுவை மக்களின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடுவேன். படிக்கமுடியாத ஏழை மாணவ மாணவிகளுக்கு அந்த தொகையை செலவு செய்வேன் என்றார்.
அதைக்கேட்ட கோடீஸ்வரர், ஆச்சரியம் அடைந்தார். கண்ணாயிரம் நீங்க ஆச்சரியமான மனிதர். வந்த செல்வத்தையெல்லாம் வாரி வழங்கிவிட்டீர்களே.. உங்களுக்கு செல்வம் என்று கேட்க, கூட்டத்தினரைக் காட்டி, இந்த புதுவை மக்கள்தான் என் செல்வம் என்று கண்ணாயிரம் சொல்ல,அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது.(தொடரும்)
வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *