சிவகிரி அருகே பெண் குத்திக் கொலை – ஒருவர் கைது
1 min read
Woman stabbed to death near Sivagiri – one arrested
31.12.2024
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே நேற்று ‘திங்கட்கிழமை) இரவு பெண் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் போலீசார் வாசுதேவநல்லூர் பகுதியைச் சார்ந்த ஒருவரை கைது செய்தனர்.
சிவகிரி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராமேஸ்வரன் (வயது 40) அவரது மனைவி பாஞ்சாலி (வயது 35 ). விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக பாஞ்சாலியும் ,ராமேஸ்வரனும் பிரிந்து விட்டனர். அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரன் சேத்தூரில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு சிவகிரி தனியார் வாகன விற்பனை நிலையம் அருகே பாஞ்சாலி இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தியதில் பாஞ்சாலி பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். சற்று நேரத்தில் பாஞ்சாலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த
புளியங்குடி காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி, உதவி ஆய்வாளர் வரதராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டு பாஞ்சாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை நடந்த இடத்தில் கிடைத்த பொருள்களையும் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கொண்டு போலீஸார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் வாசுதேவநல்லூர் குட்டையன் தெரு பகுதியைச் சார்ந்த பிச்சாண்டி என்பவரது மகன் சமுத்திரவேல் (வயது 30) என்பவரை போலீசார் பிடித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில் சமுத்திரவேலுவுக்கும் பாஞ்சாலிக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததும் இதில் ஏற்பட்ட பிரச்சனையால் பாஞ்சாலியை சமுத்திரவேல் கத்தியால் குத்தி கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிவகிரி போலீசார்
உடனடியாக சமுத்திர வேலுவை கைது செய்து சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள் . நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.அதன்படி போலீசார் சமுத்திரவேலுவை சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.