முதல்-அமைச்சரிடம் திருமாவளவன் நேரில் வைத்த 3 கோரிக்கைகள்
1 min read
Prime Minister Modi leaves for France in a private flight
10.2.2025
பட்டியல் சமூகப் பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டானை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார். மேலும் நான்கு முக்கிய கோரிக்கைகளை அவர் முதல்-அமைச்சரிடம் முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எமது வேண்டுகோளையேற்று தாய்த்தமிழ் காத்தப்போராளிகள் நடராசன்- தாளமுத்து ஆகியோருக்கு சிலை நிறுவப்படும் என அறிவிப்பு செய்துள்ள தங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன், கடந்த நான்கு ஆண்டுகளாக பட்டியல் சமூக மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக புரட்சியாளர் அம்பேத்கர், பண்டிதர் அயோத்திதாசர் பெயரிலான திட்டங்கள் உட்பட தாங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதற்காக எமது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
இந்நிலையில் தங்களது மேலான பார்வைக்குப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
1) பட்டியல் சமூகத்தினருக்கென வணிக வளாகங்களை அமைத்துத் தர வேண்டும்:
அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், நன்னிலம் திட்டம் எனத் தமிழ்நாடு அரசு நடைமுறைப் படுத்தும் திட்டங்கள் சிறப்பான பலன்களைத் தந்துள்ளன. அந்தத் திட்டங்களுக்கான பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏதுவாகக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுகிறோம்.
அத்துடன் பட்டியல் சமூகத்தினரை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் வணிக வளாகங்களை அமைத்துத் தருவதற்குத் திட்டம் ஒன்றை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2) சாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்:
சாதி மற்றும் மத அடிப்படைவாத சக்திகளின் வெறுப்பு பிரச்சாரத்தின் விளைவாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அதைக் கட்டுப்படுத்துவதற்கு சமூகநீதி சக்திகளின் ஒருங்கிணைந்த பிரச்சாரமும், காவல்துறையின் தீவிரமான நடவடிக்கையும் தேவை என்பதையே இது காட்டுகிறது. எனவே, சாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த சட்டப்பூர்வமான உறுதிமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
3) வேங்கைவயல் வழக்கு: நீதிவிசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் :
வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களையே குற்றவாளிகள் என சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது அம்மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. பெரும் அதிர்ச்சிக்குள்ளான அக்கிராமத்து மக்கள்,குற்றப்பத்திரிக்கையைத் திரும்ப பெற வேண்டுமெனவும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் வலியுறுத்தி தங்களின் குடியிருப்பு பகுதியிலேயே அமைதியான முறையில் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, தற்போது சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கும் குற்ற அறிக்கையை இறுதியாக கருதாமல், இது தொடர்பாக தீர விசாரித்து உண்மையை கண்டறிய ஏதுவாக, நீதிவிசாரணைக்கு ஆணையிட வேண்டுமாறு கோருகிறோம். அதாவது, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் “ஒரு நபர் விசாரணை ஆணையம்” ஒன்றை அமைக்குமாறு விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
4) பட்டியல் சமூகப் பிரிவினருக்குப் பதவிஉயர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்:
தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த “200 பாய்ண்ட் ரோஸ்டர் முறையை” ஒரு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்ததையடுத்து அந்த வழக்குக்கு சற்றும் தொடர்பே இல்லாத பட்டியல் வகுப்பினரின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் நூற்றுக் கணக்கான பட்டியல் சமூகத்தைச் சார்ந்த அதிகாரிகளின் பதவிகள் இதனால் கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த அநீதியைத் தடுத்து நிறுத்த அரசமைப்புச் சட்ட உறுப்பு 16(4)(A)- இன் படி, மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என கடந்த நான்கு ஆண்டுகளாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். விசிக சார்பிலும் தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். எனவே, பட்டியல் சமூக அதிகாரிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பதவி உயர்வுக்கான சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.