தமிழக கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை
1 min read
Tamil Nadu cricketer Kamalini to get Rs. 25 lakh incentive
10.2.2025
தமிழ்நாடு முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.2.2025) தலைமைச் செயலகத்தில், மலேசியாவில் நடைபெற்ற ஜூனியர் மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை கமலினிக்கு உயரிய ஊக்கத்தொகையாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் வழங்கினார்.
மேலும், புதுடெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை ஆடவர் பிரிவில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீரர் சுப்ரமணிக்கு உயரிய ஊக்கத்தொகையாக 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில், மலேசியாவில் 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த கமலினி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இதில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய கமலினி இந்திய அணி கோப்பையை வெல்வதில் பங்கு வகித்தார்.
மேலும், புதுடெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக்கோப்பை போட்டிகள் ஜனவரி 13 முதல் ஜனவரி 19, 2025 வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த சுப்ரமணி அபாரமாக விளையாடியதற்காக “சிறந்த தொடு தாக்கு வீரர் விருது” (Best Attacker Award) வென்றார். இறுதிப் போட்டியில் நேபாள அணியை 54-36 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, இந்திய அணி கோ-கோ உலகக்கோப்பையை வென்றது. இந்தப் போட்டிகளில் சுப்ரமணி சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி கோப்பையை வெல்ல உதவினார்.
கிரிக்கெட் வீராங்கனை கமலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்ரமணி ஆகியோரது சாதனைகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு முதல் – அமைச்சர் இன்றைய தினம் கமலினி மற்றும் சுப்ரமணி ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக தலா 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வின்போது, துணை முதல் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.