ஜம்மு காஷ்மீர் மக்கள் வீடுகளுக்கு திரும்பலாம் – உமர் அப்துல்லா அறிவிப்பு
1 min read
People of Jammu and Kashmir can return to their homes – Omar Abdullah announces
12.5.2025
காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதலில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் உமர் அப்துல்லா கூறியதாவது:
கடந்த 4 நாட்களாக, ஜம்மு-காஷ்மீரில் போர் போன்ற சூழல் நிலவியது. பாகிஸ்தான் நடத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதலில் பூஞ்ச் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் தாக்குதலில் 13 விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின. இந்த கடினமான சூழ்நிலையிலும் சகோதரத்துவத்தைப் பேணியதற்காக பூஞ்ச் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.பாகிஸ்தான் தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது திரும்பி வரலாம்.பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பூஞ்ச் நகரம் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காலியாக உள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறல் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கியது.
மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்கியதாக பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. ஆனால் மக்களுக்கும், எனக்கும் உண்மை தெரியும். பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது உலகிற்கே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.