இந்தியா-பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு
1 min read
India-Pakistan military officials conclude talks
12/5/2025
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.
இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 10-ந்தேதி அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.
ஆனால் போர் நிறுத்தத்தை மீறி அன்றைய தினமே இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி டிரோன் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது. இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் நேற்று இரவு இரு நாட்டு எல்லை பகுதிகளில் அமைதியான சூழல் நிலவியதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் ராணுவ படைகளின் உயர் அதிகாரிகள் மே 12-ந்தேதி(இன்று) பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை தற்போது நிறைவடைந்துள்ளதாக ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.