June 15, 2025

Seithi Saral

Tamil News Channel

நிதி ஆயோக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்

1 min read

Chief Minister MK Stalin to visit Delhi to attend NITI Aayog meeting

21/5/2025
இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த திட்டக்குழு ஆண்டுதோறும் கூடி நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அதற்கேற்ற முடிவுகளை எடுத்து வந்தது.

இதனிடையே, 2015ம் ஆண்டு மத்திய திட்டக்குழு மாற்றப்பட்டு, நிதி ஆயோக் அமைப்பாக உருவாக்கப்பட்டது. நிதி ஆயோக் தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.நிதி ஆயோக்கின் கூட்டம், பிரதமர் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அதில் பங்கேற்காத நிலையில், மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஆனால் 5 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை என கூறி கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளியேறினார்.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் 24ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (23ம் தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அன்று இரவு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் மு.க.ஸ்டாலின் 24ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான நிதியை தரும்படி பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அன்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னைக்கு வருவார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.