14 புதிய தோழி விடுதிகளுக்கு முதல்- அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
1 min read
Chief Minister lays foundation stone for 14 new hostels at a cost of Rs. 176 crore
21.5.2025
பணிபுரியும் மகளிருக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோழி விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். மேலும், ரூ. 176 கோடியில் கட்டப்பட உள்ள 14 புதிய தோழி விடுதிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.5.2025 அன்று தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், சென்னை – தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, இராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 14 தோழி விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பணி நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு பிறநகரங்களுக்கு இடம் பெயரும் பணிபுரியும் பெண்களின் தேவைகளை உணர்ந்து தரமான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளான “தோழி விடுதிகள்” தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை சென்னை, திருவள்ளூர், கோவை. செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், வேலூர், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் 16 தோழி விடுதிகளில் 1380-க்கும் மேற்பட்ட பணிபுரியும் மகளிர் பயனடையும் வகையில் முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர்களுக்கான பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பாக உள்ளதால், பணிபுரியும் மகளிரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில், பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவை அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு, கூடுதலாக தற்போது சென்னை – பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் 442 படுக்கைகள் கொண்ட மூன்று புதிய தோழி விடுதிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், தரமணி, சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, இராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 பணிபுரியும் பெண்கள் பயன்பெறும் வகையில் 14 தோழி விடுதிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ்விடுதிகளில் பயோமெட்ரிக் உள் நுழைவு, 24×7 பாதுகாப்பு வசதி, Wi-Fi வசதி, சிசிடிவி வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆரோக்கியமான உணவு, தொலைக்காட்சி,
சுடுநீர் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் நியாயமான வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் இ.ஆ.ப., கூடுதல் செயலாளர் மற்றும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வளர்மதி, அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்’
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.