Election for the post of Manimutharu Town Panchayat Chairman on the 25th
18.7.2025 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பேரூராட்சி தலைவர் பதவி இழந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் 25.07.2025 அன்று நடைபெறும் என்று பேரூராட்சி செயல் ரமாதேவி அலுவலர் அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் திமுக சார்பில் 10 உறுப்பினர்களும் அதிமுக சார்பில் 2 உறுப்பினர்களும் காங்கிரஸ், பாஜக, சுயேட்சை சார்பில் தலா 1 உறுப்பினர் களும் வெற்றி பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவர் பேரூராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பேரூராட்சி பகுதியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை இதற்கான எந்த முயற்சியிலும் அந்தோணியம்மாள் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் அந்தோணியம்மாள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்தனர். அதன்படி கடந்த மே மாதம் 8-ம் தேதி பேரூராட்சி தலைவி அந்தோணியம்மாள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கேற்ற 13 கவுன்சிலர்களும் பேரூராட்சி தலைவர் அந்தோணியம்மாள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
இதனால் மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவியாக பதவி வகித்து வந்த அந்தோணியம்மாள் பேரூராட்சி தலைவர் பதவியை இழந்தார்.
மேலும் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து தமிழ்நாடு நகர் புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி புதிய தலைவர் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று மணிமுத்தாறு பேரூராட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகளை செயல் அலுவலர் ரமாதேவி வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவர் தேர்ந்தெடுப் பதற்கான உறுப்பினர்களின் கூட்டம் வருகின்ற 25-ம் தேதி அன்று காலை10:30 மணிக்கு மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெறும், நகர் புற உள்ளாட்சி சட்டத்தின்படி மணிமுத்தாறு பேரூர் ஆட்சியின் தலைவர் பதவி ஆதிதிராவிட இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சட்டத்தின் படி மேலே குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே இத்தேர்தலில் போட்டியிடலாம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புற ஊராட்சி அமைப்புகளில் விதி 111,மற்றும் 112 ன்படி இக்கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் நடைபெறும் எனவும், புதிய தலைவருக்கான தேர்தல் கூட்டத்தில் மணிமுத்தாறு பேரூராட்சில் உள்ள வார்டு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மணிமுத்தாறு பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி தெரிவித்துள்ளார்.