தென்காசி ஆட்சியர் அலுவலக கட்டிடத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்க கோரி மனு
1 min read
Petition seeking permission from the Environment Department for the Tenkasi Collectorate building
25.7.2025
தமிழக சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றத்துறை அரசு செயலாளருக்கு தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம.உதயசூரியன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டம் கடந்த 22.11.2019 அன்று உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட நிர்வாகத்துக்கு தேவைப்படும் அலுவலகங்களை கட்ட ரூ.119 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த 11.12.2020 அன்று அப்போதைய முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தபோது, கட்டிடம் கட்டுவதற்கு தேவையான சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறவில்லை என்று கூறி உயர் நீதிமன்ற
மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் பொதுப்பணித் துறை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், சுற்றுச்சூழல் துறையில் தடையின்மை சான்றை 4 வாரத்துக்குள் பெற்று அதன் பின் பணிகளை தொடங்குவதாக எழுத்துபூர்வமாக தெரிவித்தது.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பொதுப் பணித் துறையால் 15.6.2022 அன்று சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரித்து அனுமதி அளிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது. ஆனால், நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதலை பின் பற்றாமல் சுற்றுச்சூழல் துறை அனுமதி ஏதும் வழங்காமல் காரணமின்றி காலம் கடத்துகிறது. இதனால் ரூ.119 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே, சுற்றுச்சூழல் துறை உடனடியாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம. உதயசூரியன் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.