June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

வளர்ந்த இந்தியாவின் உந்துசக்தி கடல்சார் துறை: பிரதமர் மோடி பெருமிதம்

1 min read

Maritime sector is the driving force of a developed India: PM Modi expresses pride

21.6.2026
பிரதமர் மோடி இன்று கொல்கத்தாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்க் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேம்படுத்தப்பட்ட மறைமுக தாக்குதல் போர்க்கப்பலான துனகிரி, பெரிய அளவிலான ஆய்வு கப்பலான சன் சோதக் மற்றும் நீர்மூழ்கி கப்பலில் எதிர்ப்பு போர்க் கப்பலான ஐ.என்.எஸ். அக்ரே ஆகிய 3 கப்பல்களை அவர் இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

40-க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் இந்தியா ஒரு உற்பத்தி நாடாகத் திகழ விரும்புகிறது. உற்பத்தி செய்பவர்களாக மாறும் நாளில் முடிவு எடுப்பவர்களாகவும் திகழ்வோம்.

நாம் அந்த திசையில் வேகமாக முன்னேறி வருகிறோம். சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் கடற்படையில் இணைந்து உள்ளன.

தற்போது, ​​45 பெரிய கடற்படை கப்பல்கள் மற்றும் தளங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. இது இந்தியாவின் தொழில்சார் திறனுக்கு ஒரு சான்றாகும். எதிர்காலத்திற்கான ஒரு குறியீடாகும்.

வரும் ஆண்டுகளில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆற்றல் இந்தியாவின் கடல்சார் துறைக்கு உள்ளது. இதனால் தான் கடல்சார் துறையை நாங்கள் ஒரு தனித்து இயங்கும் துறையாக மட்டும் கருதவில்லை. வளர்ந்த இந்தியாவின் வேலை வாய்ப்புக்கான உந்துசக்தியாகவே நாங்கள் அதைப் பார்க்கிறோம்.

ஒரு நவீனக் கப்பலுக்கு நூற்றுக்கணக்கான டன் எக்கு, மின்னணு சாதனங்கள், எந்திரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உதிரி பாகங்கள் தேவைப்படுகின்றன. இவை அனைத்தின் பின்னணியிலும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பணியாற்றுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

இன்று பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட 3 கப்பல்களின் கட்டுமானப் பணிகளில் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பங்காற்றியுள்ளன.

இந்த 200 நிறுவனங்களும், அதாவது இந்தச் சிறு தொழில்களும், எவ்வளவு அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

கடல்சார் வல்லரசாக திகழும் பயணத்தில் இந்தியா அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே கப்பல் கட்டும் துறைக்கான ஒரு புதிய தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா முன்னேறத் தொடங்கியுள்ளது.

பல கொள்கை சீர்திருத்தங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்கச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கப்பல் கட்டுமானம், பழுதுபார்த்தல், மறுசுழற்சி மற்றும் பராமரிப்பு- பழுதுபார்ப்பு-மேம்பாடு பணிகள் ஆகியவை ஒரு முக்கிய இயக்கமாகக் கருதப்படுகின்றன.

கப்பல் போக்குவரத்துத் துறைக்காக அறிவிக்கப்பட்ட ரூ.70,000 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகைத் திட்டம் என்பது வெறும் பொருளாதார முடிவு மட்டுமல்ல. அது இந்தியாவின் கடல்சார் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகும்.

இன்று இந்தியா தனது ஒட்டுமொத்த கடல்சார் சூழலமைப்பை வலுப்படுத்தி வருகிறது. இதற்காக, இந்தியா தனது துறைமுகங்களை நவீனமயமாக்குதல், புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல், புதிய இணைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், ஆற்றுவழித் தடங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பல்வகை போக்குவரத்து மற்றும் சரக்குக் கையாளும்கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

‘சாகர் மாலா’ போன்ற திட்டங்கள் இந்த விரிவான தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும். இது வர்த்தகச் செலவுகளைக் குறைக்கவும், தொழில்துறைகளை ஊக்குவிக்கவும், கடலோரப் பகுதிகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் உதவுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் தற்போது உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சென்றடைகின்றன.

சுயசார்பை நோக்கிய பயணத்தில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

என் பார்வையில், இது வெறும் ஆரம்பம் மட்டுமே. ஆனால், தெளிவான கொள்கை, சரியான திசை மற்றும் கூட்டு முயற்சி ஆகியவை இருக்கும்போது ஒரு நாட்டில் எவ்வளவு குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சாதிக்க முடியும் என்பதை கடந்த 12 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காட்டுகிறது.

ஒரு காலத்தில், உலகின் மிகப்பெரிய பாதுகாப்புத் தளவாட இறக்குமதியாளர்களில் ஒருவராக இந்தியா அறியப்பட்டது. 2014-ல் அரசு அமைக்கப்பட்ட பிறகு இந்தச் சூழலை மாற்றியமைக்க நாங்கள் உறுதி எடுத்தோம்.

இதற்காக முக்கியக் கொள்கை சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டன. பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதன் விளைவாக பாதுகாப்புத் துறையில் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் புதிய வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

2014-ம் ஆண்டு வரை நாட்டின் மொத்த பாதுகாப்புத் தளவாட உற்பத்தி சுமார் ரூ.40,000 கோடியாக இருந்தது. இன்று அது சுமார் ரூ.1,80,000 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி வேகமாக வளர்ந்து வரும் அதே வேளையில் நமது பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியும் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ந்து வருகிறது.

2014-ல், இந்தியா சுமார் ரூ.700 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்தது. இன்று இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட ரூ.40,000 கோடியாக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்காளம்
புதிய கடல்சார் சகாப்தத்தில் மேற்கு வங்காளம் முக்கியப் பங்காற்ற உள்ளது. துறைமுகங்கள், தொழில் துறைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள், அதற்கான திறமை ஆகியவை இங்கு உள்ளன. கடல்சார் பொருளாதாரத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் ஆற்றலும் இதற்கு உண்டு.

இந்தியாவின் நீலப் பொருளாதாரம் கடல்சார் உற்பத்தி, சரக்குக் கையாளுதல், கடலோர மேம்பாடு ஆகியவற்றில் மேற்கு வங்காளம் வரும் ஆண்டுகளில் ஒரு முக்கிய மையமாகத் திகழும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தியா எப்போதும் கடலை ஒத்துழைப்புக்கான ஒரு ஊடகமாகவே கருதி வந்துள்ளது. அதே வேளையில், அமைதியைப் பேணிக் காக்க வலிமையும் சம அளவில் அவசியம் என்பதையும் நான்கு அறியும்.

பாதுகாப்பு
செழிப்பைப் பாதுகாப்பதற்குப் பாதுகாப்பு அவசியம். எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்குத் தன்னிறைவு அவசியம். இந்த உணர்வைப் பறைசாற்றும் விதமாக, இன்று ஐ.என்.எஸ்.அக்ரே, ஐ.என்.எஸ்.துனகிரி, ஐ.என்.எஸ்.சன்சோதக் ஆகியவை இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.

21-ம் நூற்றாண்டில் தனது ஆற்றலை உணர்ந்து, தனது திறன்களின் மீது நம்பிக்கை கொண்டு, வேகம், ஆற்றல் மற்றும் உறுதியுடன் உலக அரங்கில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடனும் மனவுறுதியுடனும் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் இந்தியாவையே இவை அடையாளப்படுத்துகின்றன.

நாடுபெரும் சக்தியாக உருவாக கடல்சார் வலிமை முக்கியம். கடல்சார் வலிமை இல்லாமல் எந்த நாடும் பெரும் சக்தியாக உருவெடுக்க முடியாது. வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவை கடல்களுடன் பிணைந்துள்ளன.

நாட்டின் பொருளாதாரம், செல்வாக்கை தீர்மானிப்பதில் கடல்சார் திறன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *