குற்றாலம் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழ மலை மீது அணைக்கட்டு கட்ட கோரிக்கை
1 min read
Request to build a dam on the mountain to allow water to flow into the Courtallam Falls all year round
1.8.2025
குற்றாலம் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் வகையில் குற்றாலம் மலை மீது அணைக்கட்டு கட்ட வேண்டும் என வருவாய் துறை அமைச்சரிடம், முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன்,தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில், ஒவ்வொரு சீசன்களிலும் சுற்றுலாப்பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நிற்கும் வரிசை திருப்பதி தேவஸ்தான கூட்டத்தைப் போல உள்ளது. அருவிகளில் மலை பிடிப்பு பகுதியில் மழை பெய்து வெள்ளமே வந்தாலும் இரண்டு மூன்று தினங்களில் தண்ணீர் படிப்படியாக குறைந்து விடுகிறது.
இப்படி ஏழை எளியவர்களும் நடுத்தர மக்களும் பெரும்பாலும் வந்து மகிழ்ந்து செல்லும் குற்றாலத்தில் தண்ணீர் நிரந்தரமாக விழும்படி செய்ய அணைக்கட்டு கட்ட வேண்டும். மெயின் அருவிக்கு மூன்று கிலோமீட்டர் தொலைவில் இயற்கையாகவே மூன்று புறமும் அரண்களாக மலைமுகடுகள் சூழ்ந்துள்ள தனியாருக்கு பாத்தியப்பட்ட தெற்குமலை எஸ்டேட் அருகில் டிக்கெட் பாறை எனும் இடத்தையொட்டி 600 மீட்டர் நீளத்துக்கு இரண்டு மலைகளுக்கு இடையே அணைக்கட்டு கேரள மாநிலம் இடுக்கியில் பெரியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை போல கட்டி அதில் தண்ணீரை தேக்கலாம்.
இயற்கையாக 3 புறங்களிலும் அரண்கள் போல மலைகள் சூழ்ந்து இந்த அணைக்கட்டு திட்ட செலவு வெகு குறைவாகத்தான் ஆகும். அணைகட்டி நீரைத் தேக்கி வைத்தால் வருடம் முழுவதும் நான்கு பருவ காலமும் நிரந்தரமாக குறிப்பிட்ட அளவு தண்ணீர் அருவிகளில் விழும்படி செய்யலாம்.
குறிப்பிட்ட அளவு தண்ணீரை விழும்படி செய்வதன் மூலம் எந்த நேரமும் பாதுகாப்பாக மக்கள் எந்தவித வெள்ளம் வந்து விடுமோ பாறைகள் கற்கள் வந்து விழுந்து விடுமோ என்ற அச்சமின்றி நிம்மதியாக குளிக்கும் படி செய்யலாம்.
குற்றாலம் பகுதியிலும் அதை சுற்றியுள்ள தென்காசி செங்கோட்டை வட்டார பகுதி மக்களுக்கு நிரந்தரமாக வருடம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கும்படி செய்யலாம். பெரும் வெள்ள பெருக்கை தடுத்து நிறுத்தலாம்.
எனவே இத்திட்டத்தை செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.