June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

79-வது சுதந்திர தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்

1 min read

79th Independence Day: Chief Minister M.K. Stalin hoists the national flag

15.8.2025
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து காரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வந்தபோது அவரை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.
கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 8.45 மணிக்கு வந்திறங்கினார். அவரை தலைமைச் செயலாளர் முருகாணந்தம் வரவேற்றார். பின்னர் அங்கிருந்த முப்படைகளின் அதிகாரிகள், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) அருண் ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்-அமைச்சரை தலைமைச் செயலாளர் அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து ஜார்ஜ் கோட்டை முகப்பில், புதுப்பிக்கப்பட்ட கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக்கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கொடிக்குள் வைக்கப்பட்டு இருந்த பூக்கள் காற்றில் பறந்து வந்து விழுந்தன. மூவர்ணத்தில் பலூன்களும் பறக்கவிடப்பட்டன. தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அனைவரும் எழுந்து நின்றனர்.

தொடர்ந்து தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் கல்பனா சாவ்லா பெயரிலான விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சுதந்திர தின விழாவை காண பல தரப்பினரும் கோட்டை அருகே ஆர்வத்துடன் வந்து குவிந்தனர். விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், தியாகிகளின் குடும்பத்தினர், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். சென்னையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பழமைவாய்ந்த முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *