சினிமா ஆசைகாட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை; கேரள நடிகையிடம் விசாரணை
1 min read
Kerala actress questioned for sexually harassing minor girl in cinema
15.8.2025
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மீனு குரியன் என்ற மீனு முனிர். மலையாள திரைப்பட நடிகையான இவர், 2014-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்த தனது உறவினரின் 16 வயது மகளை, பள்ளி விடுமுறையில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு அழைத்து வந்தார்.
பின்னர் அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அந்த சிறுமியை அழைத்துச்சென்றார். ஓட்டல் அறையில் இருந்த 5 பேரிடம் சிறுமியை அறிமுகம் செய்த நடிகை மீனு குரியன், அந்த சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பது குறித்து அவர்களுடன் பேசினார்.
அப்போது அங்கிருந்த 4 பேரில் ஒருவர், சிறுமியின் கன்னத்தில் கிள்ளியும், மற்றொருவர் சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, அங்கிருந்து அலறி அடித்து வெளியே ஓடிவிட்டார்.
அதன்பிறகு கேரளா சென்ற சிறுமி, பயம் காரணமாக இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனுமதியுடன் கடந்த 2024-ம் ஆண்டு எர்ணாகுளம் மூவாட்டு புழா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் கேரள மாநில போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சிறுமிக்கு பாலியல் கொடுத்த சம்பவம் சென்னை அண்ணா நகர் பகுதியில் நடந்ததால் இந்த வழக்கு சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்தநிலையில் கேரள மாநிலம் சென்ற அவர், நடிகை மீனு குரியனை கைது செய்து சென்னை அழைத்து வந்தார். இது குறித்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான நடிகை மீனு குரியனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணைக்கு பிறகுதான், சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யார், யார்? என்பது பற்றி தெரியவரும். அதன்பிறகு அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சினிமாவில் நடிக்க வைப்பதாக 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான மலையாள நடிகையிடம் 2-வது நாளாக இன்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.