சுற்றுலாத் துறையின் வருமானம் 5 மடங்கு அதிகரிப்பு – தமிழக அரசு பெருமிதம்
1 min read
Tourism sector’s growth is the Israeli Times – Tamil Nadu Government is proud
16/8/2025
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுற்றுலா, புதுமை காணும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. புத்துணர்ச்சி அளிக்கிறது; அறிவு வளர்ச்சிக்கும், ஆற்றலின் பெருக்கத்திற்கும் துணைபுரிகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், வேலை வாய்ப்புகள் வழங்குவதிலும் இன்று சுற்றுலாத்துறை பெரிய காரணியாக விளங்குகிறது. உலக அளவில் நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதிலும், மனித நாகரிகத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
கடலூர் மாவட்டம் பிச்சாவரம் படகு இல்லப்பகுதிகள் பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.14.07 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு ரூ.11.46 கோடியில் புதிய காட்சி முனைகள் அமைத்திடவும் தற்போதைய காட்சிமுனைகளை மேம்படுத்திடவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. யுனஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமான கங்கை கொண்ட சோழபுரம் கோயில் நுழைவு வளாகம் பல்வேறு வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது. ஏற்காடு நிலச்சீரமைப்பு, காட்சி முனை, பிற சுற்றுலா வசதிகள் ரூ.9.70 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன. இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டிலும், உதகமண்டலம் ஏரிப்பகுதியில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டிலும், கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை மற்றும் கோவளம் கடற்கரைப் பகுதி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரைப் பகுதிகள் ரூ.3.07 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படுகின்றன.
சுற்றுலாத்துறை பெற்றுள்ள விருதுகள்
தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல்வேறு வசதிகளுக்கும் உரிய திட்டங்களை நிறைவேற்றிவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு பல்வேறு சுற்றுலா விருதுகளை வென்று புகழ் படைத்து வருகிறது.
புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேசச் சுற்றுலா மாநாடு மற்றும் பயண விருதுகளில் திருக்கோயில் சுற்றுலாவை ஊக்குவித்ததற்கான விருது; இந்தியா டுடே சுற்றுலா ஆய்வு விருதுகள் 2021 இல், சிறந்த மலைப்பகுதிக்கான விருது குன்னூருக்கும், இயற்கை எழில் கொஞ்சும் சாலை வகைப்பாட்டிற்கான விருது கொல்லி மலைக்கும் வழங்கப்பட்டுள்ளது. பசிபிக் பகுதி சுற்றுலா எழுத்தாளர்கள் சங்கம் ஆன்மீகச் சுற்றுலாவுக்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு எனும் விருது, பிரம்மிக்க வைக்கும் மலைக்காட்சிகளுக்கான அவுட்லுக் டிராவலர் விருதுகள் – 2022 – விழாவில் குன்னூருக்கு வழங்கப்பட்ட வெள்ளி விருது, இந்தியாவின் சிறந்த சுற்றுலா அமைச்சர் 2023 விருது தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களுக்கும் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற ஜப்பான் சுற்றுலா எக்ஸ்போ விருது இந்தியாவின் சிறந்த பாரம்பரியத் தலத்திற்கான வெள்ளி விருது, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களுக்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை பெற்ற விருது, பெர்லின் மாநகரில் 6.3.2024 அன்று நடைபெற்ற விழாவில் பசிபிக் பகுதி சுற்றுலா எழுத்தாளர் சங்கத்தால் தமிழ்நாடு கலாச்சார தலத்திற்கு வழங்கப்பட்ட சர்வதேசப் பயண விருதுகள் என எண்ணற்ற விருதுகளைப் பெற்று இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் துறை என திராவிட மாடல் அரசின் சுற்றுலாத் துறை புகழ்வடிவில் ஒளிர்கிறது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலா மையங்களை மேம்படுத்தி, சுற்றுலா வரும் மக்கள் மனம் மகிழும் வகையில் அவர்களுக்குத் தேவைப்படும் வசதிகளை உருவாக்கி, உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து, சுகமாகத் தங்கி மகிழ்ந்து புத்துணர்ச்சியுடன் பெருமிதம் கொள்ளும் வகையில் சுற்றுலா கழகத்தின் ஓட்டல்கள், அங்கு அறுசுவை உணவுகள், அவற்றுக்கான பயண வாகனங்கள், பாதுகாப்பு வசதிகள் அனைத்திலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கிடும் ஊக்கத்தால் திராவிட மாடல் அரசின் சுற்றுலாத்துறை இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத் துறையாகப் புகழ் பெருக்கிப் பாராட்டப்படுகிறது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.